ஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது?

Written on:March 18, 2018
Comments
Add One

ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events)தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய நிகழ்வில்; பெரியளவு முக்கியத்துவம் கிடைக்காதுதான். பதிலாக பக்க நிகழ்வுகளில்தான் தமிழ் மக்கள் தமது குரலை வலிமையாகவும், உரத்தும் ஒலிக்க முடியும். பக்க நிகழ்வுகள்,நிழல் அறிக்கைகள்(shadow reports) போன்றவை அரசற்ற தரப்புக்கள் தமது நியாயத்தை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள்தான். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது பயங்களையும், சந்தேகங்களையும், நியாயங்களையும் மேற்படி ஏற்பாடுகளுக்கூடாகவே பெருமளவில் முன்வைத்து வருகிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித நேய அமைப்புக்கள், சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டு அமைப்புக்கள் போன்ற அமைப்புக்களுக்கூடாக பக்க நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுவதுண்டு. தமிழ் டயஸ்பொறாவானது தனது பலத்தைக் காட்டும் ஒரு முக்கிய களம் அது. தமிழ் டயஸ்பொறா மட்டுமல்ல. தமிழ்த்தரப்பின் பேரத்தை அதிகம் வெளிப்படுத்தும் களமும் அதுதான்.

நடந்துகொண்டிருக்கும் 37வது கூட்டத்தொடரிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 25ம் இலக்க அறையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பக்க நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. போர்க்குற்றம் தொடர்பிலும், இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது தொடர்பிலும் உலகளாவிய அளவில் செயற்பட்டு வரும் முக்கிய ஆளுமைகள் இதில் பங்கெடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்து போன ஸ்ரீபன் ரப் இம்முறை மேற்படி பக்கநிகழ்வில் பங்கெடுத்திருக்கிறார். தன் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற பின் தமிழ்த்தரப்பிற்கு சாதகமான ஓர் அரங்கில் அவர் தோன்றியிருக்கிறார்.

மற்றொரு பக்க நிகழ்வு 5ம் திகதி நடந்திருக்கிறது. 8ம் இலக்க அறையில் நடந்த இந்நிகழ்வை கனடா, சுவிற்சலார்ந்து, ஜேர்மனி போன்ற நாடுகளும் மனித உரிமைகள் ஆணையகமும் அனைத்துலக மனித நேய அமைப்புக்கள் சிலவும் ஒழுங்குபடுத்தியிருந்தன. தாயகத்திலிருந்து வவுனியாவைச் சேர்ந்த ஓர் அரச சார்பற்ற நிறுவனம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நான்கு உறவினர்களை அந்நிகழ்விற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இதைப் போலவே ஒரு கிறிஸ்தவ மதகுருவும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இருவரை ஜெனீவாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இரண தீவிலும் கேப்பாபுலவிலும் தமது காணிகளைக் கேட்டுப் போராடும் மக்களின் பிரதிநிதிகள் இருவர் இம்;முறை ஜெனீவாவிற்கு சென்றிருக்கிறார்கள்.

8ம் இலக்க அறையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில், தென்னிலங்கையில் காணாமல் போன பிரகீத் ஏக்னலியகொடவின் மனைவியும் பங்குபற்றியிருக்கிறார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் துணை ஆணையாளர் பங்குபற்றியிருக்கிறார். அவரோடு பப்லோ டிகிரியும் பங்குபற்றியிருக்கிறார். நிலைமாறுகால நீதி தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரே பப்லோ டிகிரி. சில மாதங்களுக்கு முன் இவர் இலங்கைக்கு வந்து சென்றிருந்தார்.

பதினான்கிற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிகளும் ஆறிட்கும் குறையாத ஐ.என்.ஜி ஓக்கள் மற்றும் அரசுசாரா உலகப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுமாக ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அந்நிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள்.கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் பெருந்தொகையான வெளி நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு பக்க நிகழ்வு அதுவென்று கூறப்படுகிறது.வழமையாக பக்க நிகழ்வுகளில் புலம்பெயர்ந்த தமிழ் பிரதிநிகளே அதிகளவு கலந்து கொள்வதுண்டு என்றும் கூறபடுகிறது.

மேற்படி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது சாட்சியத்தை வலிமையாகவும், கூர்மையாகவும் முன்வைத்திருக்கிறார்கள். அரசுத் தலைவரை தாம் சந்தித்த போது தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அரசாங்கத்தால் அண்மையில் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பிக்கையீனம் தெரிவித்திருக்கிறார்கள். திருமதி சந்தியா எக்னலியகொடவும் மேற்படி தமிழ்ப் பிரதிநிதிகளின் கருத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இவர்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பின் பப்லோ டிகிரி ஒரு விடயத்தை வலியுறுத்தியிருக்கிறார். அதன் பலங்கள், பலவீனங்களோடும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒரு முதலாவது காலடியென்றும் அதை தொடர்ந்து பலப்படுத்தலாம் என்றும் அவர் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

அவரைப் போலவே வேறு ஐ.நாப் பிரதானிகளும் மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களும் வௌ;வேறு சந்திப்புக்களின் போது தமிழ்த்தரப்பை சாந்தப்படுத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி அரசாங்கம் அவசர அவசரமாக செய்து முடிக்கும் வீட்டு வேலைகளை சுட்டிக்காட்டி தமிழ்த்தரப்பிற்கு நம்பிக்கையூட்ட முற்பட்டிருக்கிறார்கள்.

கடந்த மாதம் 26ம் திகதி ஐ.நாக் கூட்டத்தொடர் தொட்ங்குவதற்கு முன்னரே குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிந்த கையோடு ஒரு தொகுதி தமிழர்களும், சில சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஜெனீவாவிற்குச் சென்றிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இக்காலப் பகுதியில் சென்றிருக்கிறார். இவர்கள் பங்குபற்றிய சந்திப்புக்களில் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அரசாங்கம் செய்து முடித்திருக்கும் வீட்டு வேலைகள் தொடர்பாக மேற்கத்தைய பிரதிநிதிகள் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக உள்;ராட்சிமன்றத் தேர்தலுக்குப்பின் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சுற்றோட்டங்களைக் குறித்தும் கேட்கப்பட்டிருக்கிறது.

இச்சந்திப்புக்களில் பங்குபற்றிய சில செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி நாட்டு நடப்புக்களைக் குறித்து அவர்கள் ஆர்வமாக தகவல்களை சேகரித்த போதிலும் இறுதியாக என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு அவர்கள் காணப்பட்டார்களாம். கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அரசாங்கம் செய்து முடித்திருக்கும் வீட்டு வேலைகளைச் சுட்டிக்காட்டி நிலைமாறுகால நீதியின் மீது தமிழ்த்தரப்பிற்கு நம்பிக்கைவரச் செய்வதே அவர்களிற் பலருடைய எத்தனமாக இருந்திருக்கிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் இக்கூட்டரசாங்கத்தைப் பாதுகாப்து என்ற முடிவை அவர்கள் ஏற்கெனவே எடுத்து விட்டார்கள் என்று தோன்றியதாம்.

இச்சந்திப்புக்களில் ஒன்றின்போது பேசிய சுமந்திரன் அரசாங்கம் நம்பிக்கையூட்டும் விதத்தில் நடக்கவில்லை என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதோடு தமது கட்சி பெற்ற தோல்வியையும் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.கூட்டத்தொடர் தொடங்கிய பின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அது சேகரித்த கையெழுத்துக்களோடு ஜெனீவாவிற்குச் சென்றிருக்கிறது.


இவ்வாறாக தமிழ்த் தரப்பானது பக்க நிகழ்வுகளிற் தனது பலத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அரசாங்கம் அவசர அவரசமாக சில வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது. கூட்டத்தொடருக்கு சற்று முன்பாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்திற்குரிய ஆணையாளர்களை அது நியமித்தது. 7ம் திகதி நாடாளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்குரிய அனைத்துலக இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட மூலத்தை முன்வைத்துப் பேசிய திலக் மாரப்பண இச்சட்டமூலமானது இறந்த காலத்திற்குப் பொருந்தாது என்று கூறியிருக்கிறார். ஆனால் இச்சட்ட மூலத்திற்குரிய அனைத்துலக சட்டத்தின் முகப்பு வாசகத்தில் அது எக்காலத்திற்கும் உரியதாகக் கூறப்படுகிறது என்று சுமந்திரன் ஒர் ஊடகவியலாளருக்குத் தெரிவித்திருக்கிறார்

.இச்சட்டமூலம் இறந்த காலத்தையும் கவனத்தில் எடுத்தால் இலங்கைத்தீவின் யுத்த வெற்றி நாயகர்களில் பலர் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடும். அதனால்தான் மகிந்த அணியும், மகா சங்கமும் அதை எதிர்;க்கின்றன. அவ் எதிர்ப்பை சமாளிப்பதற்காக அரசாங்கம் இறந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இச்சட்டத்தின் கீழ் விசாரிப்பதில்லை என்றும் இனிவரும் காலத்திற்கே இச்சட்டம் பொருந்தும் என்றும்; கூறுகிறது. இது விடயத்தல் திலக் மாரப்பண கூறுவது சரியா? அல்லது சுமந்திரன் கூறுவது சரியா? என்பதனை எதிர்காலத்தின் நீதிமன்றங்களே தீர்மானிக்கப் போகின்றன.

இச்சட்டத்தைப் போலவே மற்றொரு வீட்டு வேலையையும் அரசாங்கம் அவசர அவசரமாகச் செய்து வருகின்றது. இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்தை உருவாக்குவதே அது. இவ்வாறாக அவசர அவசரமாக அரசாங்கம் வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஈராண்டு கால அவகாசத்துள் ஓராண்டு முடியும் தறுவாயில் இவ்வீட்டு வேலைகள் செய்யப்படுகின்றன. அரசாங்கம் அவற்றை இதய சுத்தியோடு செய்யவில்லை என்பதும் கண் துடைப்பாகவே செய்கிறது என்பதும் ஐ.நாவிற்கும் தெரியும்.

ஆனால் அதற்காக ஐ.நா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போவதில்லை. ஏனெனில் ஐ.நாவிற்கும், மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இப்போதுள்ள பிரச்சினையெல்லாம் தாமரை மொட்டின் எழுச்சியை எப்படி சமாளிப்பது என்பதுதான். ஆட்சி மாற்றத்தின் பின்னிருந்து கடந்த மூன்றாண்டுகளாக இலங்கைத் தீவில் ஸ்தாபிக்கப்பட்டு வரும் ஒரு வலுச்சமநிலையானது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளோடு தளம்பத் தொடங்கி விட்டது. அதை எப்படி ஸ்திரப்படுத்தலாம் என்பதுதான் இப்பொழுது ஐ.நாவின் பிரதான கரிசனையாக இருக்கும். நிலைமாறுகால நீதியை எப்படி ஸ்தாபிக்கலாம் என்பது இரண்டாம் பட்சக் கரிசனைதான். தேர்தல் முடிவுகளின் விளைவாக புதிய அரசியல் சுற்றோட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றை எப்படிக் கையாளலாம் என்பதைக் குறித்தே மேற்கு நாடுகளும், இந்தியாவும் சிந்திக்கின்றன.

ஒரு புறம் மகிந்தவின் மீள் வருகையை சமாளித்து கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். இன்னொரு புறம் தமிழ்ப் பகுதிகளில் கூட்டமைப்பின் ஏகபோகம் சவாலுக்குள்ளாகியிருப்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மகிந்த தொடர்ந்தும் வலிமையாக தலை தூக்கினால் அவரைக் கையாளுவதற்கு தமிழ் மக்களைத்தான் மேற்கும், இந்தியாவும் தேடி வரும். சில சமயம் ராஜபக்ஸ சகோதரர்கள் இறந்தகாலத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் தமது வெளியுறவுக் கொள்கையை மாற்றக்கூடும். எனினும் தமிழ் மக்களை ஒரு தரப்பாகக் கையாள வேண்டிய தேவையை ராஜபக்ஸவின் மீள் வருகை அதிகப்படுத்தியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளின் பின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமெரிக்க தூதரக அதிகாரிகளையும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதுவரையும் சந்தித்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் தமது கொழும்புத் தூதரகத்தையும் சந்திக்குமாறு அக்கட்சியினரைக் கேட்டிருக்கிறது. 2010இல் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்த கையோடு அக்கட்சியினர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு சென்ற போது வழங்கப்பட்ட மிக மோசமான வரவேற்போடு ஒப்பிடுகையில் இம்முறை சந்திப்புக்கள் கௌரவமானவைகளாக இருந்தன என்று அக்கட்சியினர் தெரிவித்தனர். அதே சமயம் கடந்த மாதம் நடந்த பேரவைக் கூட்டத்தின் பின் விக்னேஸ்வரனும் புவிசார் அரசியலைக் கையாள்வது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அக்கருத்துக்கள் இந்தியாவை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்திருந்தன.

இப்படிப் பார்த்தால் தமிழ்த்தரப்பில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சுற்றோட்டங்களை தமக்கு சாதகமாகக் கையாள வேண்டிய ஒரு நிலமை மேற்கிற்கும், இந்தியாவிற்கும், ஐ.நாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இம்முறை ஜெனீவாக் கூட்டத்தொடரில் மேற்கு நாடுகளும், இந்தியாவும் ஒரு புறம் கூட்டரசாங்கத்தையும் பாதுகாக்கும். இன்னொரு புறம் தமிழ்த்தரப்பையும் கையாளப்படத்தக்க ஓர் உறவு நிலைக்குள் பேண முற்படும். அவர்களுக்கு இப்பொழுது இலங்கைத் தீவில் கூட்டரசாங்கமும் தேவை. தமிழ்த்தரப்பும் தேவை.

அண்மையில் அம்பாறையிலும், கண்டியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அடிப்படைகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதை நிரூபித்திருக்கின்றன. குறிப்பாக நிலைமாறுகால நீதியின் நான்கு பெரும் தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமை என்ற தூணை இலங்கைத்தீவில் நிறுவுவது எவ்வளவு கடினம் என்பதனை மேற்படித் தாக்குதல்கள் நிரூபித்திருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக அரசாங்கம் அடிப்படையான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யத் தவறியமையின் விளைவுளே இவை. அவ்வாறான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யத்தக்க திராணி அரசாங்கத்திடம் இல்லை. அண்மை வாரங்களாக அவசர அவரசமாக கண் துடைப்பாகச் செய்யப்பட்டு வரும் வீட்டு வேலைகளும் அதைத்தான் காட்டுகின்றன.

இப்படிப் பார்த்தால் செய்யத் தவறிய வீட்டு வேலைகளுக்காகவும் பொய்யிற்கு செய்யப்பட்ட வீட்டு வேலைகளுக்காகவும் ஜெனீவாவில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு முழுவதிலும் இலங்கைக்கு வந்து போன ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளின் பிரகாரமும் அப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்பதே உள்;ராட்சி மன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான ஐ.நா யதார்த்தமாகும். மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை கூர்மையானதாக காட்டமானதாக இருக்கக்கூடும் ஆனால் நடைமுறையில் ஐ.நா அரசாங்கத்தின் மீது அதிகரித்த அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே தெரிகின்றன. இது தமிழ் மக்களுக்கு ஒரு பாதகமான அம்சம். ஆனாலும் மற்றொரு சாதகமான அம்சமும் உண்டு. தாமரை மொட்டின் எழுச்சியைக் கையாள்வதற்கு தமிழ் மக்களை கையாளப்படத்தக்க ஓர் உறவு நிலைக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை ஐ.நாவிற்கு அதிகரித்திருக்கிறது. இச்சாதகமான அம்சத்தை வெற்றிகரமாகக் கையாண்டு தமது பேரத்தை எப்படி மேலும் அதிகப்படுத்தலாம் என்பதைக் குறித்து தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்

Written on:March 18, 2018

இலங்கைத்தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த நூற்றாண்டில் 1915ல் இடம்பெற்றன. இத் தாக்குதல்கள் தொடர்பில் முக்கிய சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக சேர்.பொன் இராமநாதன் பிரித்தானியாவிற்குச் சென்று வாதாடி அவர்களை விடுவித்தார். அவர் நாடு திரும்பிய பொழுது சிங்களத் தலைவர்கள் அவர் பயணம் செய்த வாகனத்தை தங்கள் கைகளால் இழுத்துச் சென்றார்கள். இது…

Read more...

முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்?

Written on:March 11, 2018

“தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை…

Read more...

விக்னேஸ்வரனின் கணக்கு?

Written on:March 4, 2018

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது.ஆனால்…

Read more...

ரணில் ஒரு வலிய சீவன்

Written on:February 25, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை “ஒரு நரி” என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு….

Read more...

திரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?

Written on:February 18, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. 5. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது. 6. ஆயுத மோதல்கள்…

Read more...

புதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது?

Written on:February 4, 2018

புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே…

Read more...

இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா?தமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது?

Written on:January 28, 2018

கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய அந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு விடயத்தை அழுத்திச் சொல்லியிருக்கிறார். இத் தேர்தல் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு அல்ல என்பதே அது. உள்ளூர் அதிகாரங்களைப் பிரயோகித்து ஊர்களை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்தலே இதுவென்று அவர்…

Read more...

வீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்

Written on:January 21, 2018

தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை. இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஷங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை.இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஷமாகிய “தூய கரம் தூய…

Read more...

உள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்

Written on:January 14, 2018

கொழும்பில் கொட்டேனாவில் ஒரு சில்லறை வியாபாரி சொன்னார். “கொழும்பில் போளை அடித்துக் கொண்டு திரிந்தவன் எல்லாம் ஊரில எலக்சன் கேட்கிறான்” என்று. கடந்த கிழமை நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான் கன்னி அமர்வின் போது நடந்த குத்துச்சண்டைகளை வைத்துப் பார்த்தால் போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேற்கூறிய சில்லறை வியாபாரி…

Read more...