Google

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும்

Written on:March 31, 2013
Comments
Add One

அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்ட கால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஒரு கருவியே ஈழத்தமிழ் அரசியல். புதுடில்லிக்கும் ஈழத் தமிழர்கள் மீது காதலோ பாசமோ கிடையாது. அவர்களுக்கென்றும் ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஜெயலலிதாவிற்கும் ஈழத்தமிழர்கள் மீது பாசம் கிடையாது. அவருக்கும் வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. கருணாநிதிக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு.
ஆனால், தமிழ் நாட்டின் மாணவர்களுக்கோ அல்லது கட்சி சாரா அமைப்புகளுக்கோ மனித நேய நிறுவனங்களுக்கோ அல்லது மனித உரிமை ஆர்வலர்களுக்கோ மேற்கண்டவாறான சூதான உள்நோக்கமுடைய நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது. அது ஒரு தன்னியல்பான பரிசுத்தமான எழுச்சி.
பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரத்துக்கும் அரசுக்கும் எதிரானவர்கள். எது தீவிரமானதோ அதன் பின்தான் அணிதிரள்வார்கள். நசியும் மிதவாதிகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. யாழ். பல்கலைக்கழகமும் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியை முன்பு நிராகரித்திருக்கிறது. இப்பொழுதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே ஆதரவு அதிகம். எனவே, சூதான நிகழ்ச்சி நிரல்கள் எதுவுமற்ற சமரசத்திற்குப் போகத் தயாரற்ற தமிழக மாணவர் எழுச்சியானது அதன் தர்க்க பூர்வ விளைவாக கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அசைத்திருக்கிறது. ஏன் புதுடில்லியைக் கூட ஓரளவிற்கு அசைத்துத்தானிருக்கிறது. ஜெனிவாக் கூட்டத்தொடரின் தொடக்க நாட்களில் தீர்மானத்தின் கடுமையைத் தணிப்பதற்கு இந்தியா முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தீர்மானம் வெளிவர இருந்த இறுதி நாட்களில் இந்தியா அதன் கடுமையைக் கூட்ட எத்தனித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, தமிழக மாணவர்கள் புதுடில்லியை அதன் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்களில் தடுமாறச் செய்திருக்கிறார்கள். இதனை முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் கன்வல் சிபல் ‘‘ஒரு தர்மசங்கடமான ஒழுங்கின்மை” என்று கூறியிருக்கிறார். மார்ச் 26ஆம் திகதி இந்தியா டுடேயில் எழுதிய ஒரு கட்டுரையில் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

Location Map of Sri Lanka in the Indian Oceanஆயின், சூதான நிகழ்ச்சி நிரல் எதையும் கொண்டிராத மாணவர்களின் எழுச்சியானது நலன்சார் வெளியுறவுத் தீர்மானங்களில் சலனங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?
மாணவர்களின் போராட்டம் உச்சமாகவிருந்த நாட்களில் ஹிந்து பத்திரிகையின் தலையங்கம் ஒன்றில் தமிழ்நாடு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்க முடியாது என்ற தொனிப்பட எழுதியிருந்தது. அண்மையில் பி.பி.சி.க்குப் பேட்டியளித்த ஹிந்து ராம், தமிழ்நாட்டை மட்டும் கவனத்தில் எடுத்து இந்தியா தன் வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாது என்ற தொனிப்படக் கூறியிருந்தார். கன்வல் சிபலும் ஏறக்குறைய இப்படித்தான் கேட்கிறார். தமிழ் நாட்டின் உணர்வுகளின் அடிப்படையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படுமாயிருந்தால் பின்னாளில் பங்களாதேஷ் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மேற்கு வங்கத்தின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல நேபாளத்தைக் குறித்து முடிவெடுக்கும் போது உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் முடிவுகளை பொருட்படுத்த வேண்டியிருக்கும் என்று கன்வல் சிபல் கூறுகிறார்.

அமெரிக்க படைத்துறை வரலாற்றாசிரியரும் மூலோபாய ஆய்வாளருமான எட்வேர்ட் லுட்வாக் மார்ச் 22இல் எக்கொனமிக்டைம்ஸ்இற்;கு வழங்கிய ஒரு செவ்வியில், இந்தியாவானது தனது அயலவர்களைப் பகைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற தொனிப்பட கூறியிருந்தார். சீனாவானது எப்படி வியட்நாம், இந்தியா, ஜப்பான், தாய்வான் போன்ற எல்லா அயலவர்களோடும் சச்சரவுகளில் ஈடுபட்டதன் மூலம் அதன் போக்கில் தன்னைத்தானே முடக்கிக் கொண்டதோ அப்படி இந்தியாவும் தனது அயலவர்களோடு பகை நிலைக்குப் போகக்கூடாது என்று எட்வேர்ட் லுட்வாக் கூறுகிறார்.

இலங்கைத் தீவில் சீனா தற்பொழுது உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளில்தான் அதிகம் முதலீடு செய்து வருவதைச் சுட்டிக்காட்டும் எட்வேர்ட் லுட்வாக், இம்முதலீடுகள் பாதுகாப்புத் துறைக்கும் விஸ்தரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக இந்தியாவானது சிறிலங்காவுடன் நல்லிணக்கத்தைப் பேணவேண்டும் என்றும் கூறுகிறார்.

இலங்கைத்தீவில் மட்டுமல்ல, ஆபிரிக்காவிலும் சீனா அதிகமதிகம் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளில்தான் முதலீடு செய்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அண்மையில், சீன – சிறிலங்கா கூட்டிணைவானது செய்மதித்துறைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனால், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஐஸ்வன் சிங்கா, இந்தியாவின் தற்போதுள்ள வெளியுறவுக் கொள்கையை வஞ்சகமான கொள்கை என்று வர்ணித்துள்ளார். ஜெனிவாக் கூட்டத் தொடர் பற்றிய நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் நாட்டோடு ஒரு மொழியிலும் இலங்கையோடு இன்னொரு மொழியிலுமாக இரண்டு மொழிகளில் பேசிவருகிறது என்று ஐஸ்வன் சிங்கா குற்றம் சாட்டுகிறார். அவர் மேலும் கூறும்போது, இந்திய வெளியுறவுக் கொள்கையானது பயம், உதவியற்றதனம் என்பவற்றிலேயே தளமிடப்பட்டிருப்பதாகவும், அது உறுதியான நம்பிக்கை மீது தளமிடப்பட்டிருக்கவில்லை என்றும் விமர்ச்சிக்கின்றார். பயம் என்று அவர் கருதுவது கொழும்பை மேலும் நெருக்கினால் அது பீஜிங்கை நோக்கி மேலும் சரிந்துவிடும் என்று இந்தியாவுக்கு உள்ள பயத்தையே.

ஆனால், அதேசமயம் அனைத்துலக அனர்த்தக் குழுவின் அறிக்கையொன்று பின்வருமாறு கூறுகிறது. ‘‘புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்திய அரசாங்கம் சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்தக் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து விட்டது. சக்திமிக்க நெம்புகோல் இழக்கப்பட்டுவிட்டது” என்று ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் பெரும்பாலான ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இலங்கை பொறுத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு யதார்த்தங்களை கவனத்தில் எடுத்தே வகுக்கப்பட வேண்டும் என்று கூறிவருகின்றார்கள்.

மேற்கண்ட பல்வேறு தரப்பினருடையதும், கருத்துக்களின் அடிப்படையில் கூறுமிடத்து இலங்கை தொடர்பிலான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது ஒரு விவாதப் பொருளாக மாறி வருவதைக் காணலாம். உண்மையாகவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஐஸ்வன் சிங்கா கூறியதைப் போல பயத்தின் மீது தளமிடப்பட்டுள்ளதா? அல்லது ‘‘நாங்கள் எங்கள் பலத்தை பிரயோகிக்கவில்லை என்றால் நாங்கள் பலமற்றவர்களாக பார்க்கப்படுவோம்” என்று கன்வல் சிபல் கூறுமளவிற்கு நிலைமை பலவீனமாக உள்ளதா?

ஒரு பிராந்திய பேரரசின் வெளியுறவுக் கொள்கையானது மூன்று வேறு தவிர்க்கப்படவியலாத யதார்த்தங்களின் மீது தளமிடப்பட்டிருந்தால் தான் அது எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறமுடியும். உள்நாட்டு யதார்த்தம், பிராந்திய யதார்த்தம், அனைத்துலக யதார்த்தம் ஆகிய மூன்றுமே அவையாகும். மேற்சொன்ன யதார்த்தங்களுக்கிடையில் சமநிலைப் புள்ளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அப்புள்ளிகளை இணைத்து துணிச்சலான ஒரு வெளியுறவுக்கொள்கையை வகுப்பதற்கும், உருக்கினாலும், இரத்தத்தினாலும் வார்க்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் வேண்டும். இந்திரா காந்தியின் காலம் அத்தகையது என்று கூறப்படுவதுண்டு. இந்திரா காந்திக்குப் பின் அத்தகையதொரு தலைமைத்துவம் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. வீ.பீ.சிங் ஒரு விதிவிலக்கு. அவர் உருக்கினாலும், இரத்தத்தினாலும் வார்க்கப்பட்டவரல்ல. இந்திய ஆன்மீகத்தின் செழிப்பான பகுதிகளின் வாரிசாகத் தோன்றிய அவர், அதிகபட்சம், விட்டுக்கொடுப்புள்ள ஒரு தாராளவாதியாகவே காட்சியளித்தார். அவருடைய காலத்தில்தான் ஐ.பி.கே.எவ். பின்வாங்கப்பட்டது. இந்திரா காந்தி இரு துருவ உலக ஒழுங்கிற்குரியவர். வீ.பீ.சிங் இரு துருவ உலக ஒழுங்கின் முடிவுக் கட்டத்தில் பதவிக்கு வந்தவர். நரசிம்மராவ் ஒரு துருவ உலக ஒழுங்கிற்குரியவர். அவர் தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் உருக்கினாலும், இரத்த்தினாலும் வார்க்கப்பட்டவராக காட்சியளிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருதுருவ உலக ஒழுங்கின் பொருளாதார அடித்தளத்தோடு இணைத்ததில் நரசிம்மராவின் பங்களிப்பு மிகவும் முக்கியானது. பொருளாதார விவகாரங்களில் அவருடைய ஆளுமை பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால், பிற விவகாரங்களில் அவர் ; முடிவுகளை ஒத்திப்போடும் ஒரு உத்தியைக் கடைப்பிடிக்கும் தலைவராகவே காட்சியளித்தார். நரசிம்மராவ் திறந்து விட்ட கதவுகளின் ஊடாக முன்னேறிய இந்தியா உலகின் மிகப் பெரிய, மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மேலெழுந்தது. நரசிம்மராவின் பொருளாதார சீர்திருத்தங்களை அவரின் நிதியமைச்சராக இருந்து முன்னெடுத்தவரே மன்மோகன்சிங் ஆவர். ஏறக்குறைய நரசிம்மராவைப் போலவே அவரும் காட்சியளிக்கிறார். இப்போதிருக்கும் இந்தியத் தலைமைத்துவம் இரு கூறுகளை உடையது. பிரதமராக மன்மோகன்சிங் இருக்கிறார். கிங் மேக்கராக சோனியாகாந்தி இருக்கிறார். இரு வேறு ஆளுமைகள் சேர்ந்து உருக்கினாலும், இரத்தத்தினாலும் வார்க்கப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை வழங்க முடியாது. நரசிம்மராவிற்கும் மன்மோகன்சிங்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் அத்வானியைக் குறித்து அதிகம் எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் அவர் உருக்கினாலும், இரத்தத்தினாலும் வார்க்கப்பட்ட ஒரு தலைவராக வரக்கூடும் என்ற நம்பிக்கையூட்டுபவர் போலக் காட்சியளித்தார். ஆனால், அது நடக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின் இலங்கை தொடர்பில் இந்தியா தெரிவுகளற்ற ஒரு வெளிக்குள் தள்ளப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டது. நரசிம்மராவ் புதிய தெரிவுகளை உருவாக்க முயற்சிக்கவில்லை. ஒரு பிராந்திய பேரரசு ஒரு சிறிய அயல் நாடு பொறுத்து தெரிவுகளற்றுக் காணப்படுவது என்பது அதன் வெளியுறவுக் கொள்கையின் போதாமையைத் தான் குறிக்கும். நந்திக் கடற்கரையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது புதிய தெரிவுகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் இந்தியாவுக்குக் கிடைத்தன. ஆனால், அனைத்துலக அனர்த்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல சக்தி மிக்க அந்த நெம்புகோலைப் பிரயோகிக்க இந்தியா தவறிவிட்டது. இப்பொழுது சிங்கள மக்களும் இந்தியாவை சந்தேகிக்கிறார்கள். தமிழ் மக்களும் இ;ந்தியாவை சந்தேகிக்கிறார்கள்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவென்பது சீனாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான உறவைப் போன்றது என்று கூறுகிறார் தயான் ஜயதிலக. பண்பாட்டு தொடர்ச்சி காரணமாக இணக்கமும் வேறு விவகாரங்களில் பிணக்குகளும் இருப்பதாகக் கூறும் அவர் ‘‘சிறிலங்காவின் வெளியுறவுகளைப் பொறுத்தவரை இந்தியாவுடனான உறவை சமாளிப்பது மிக முக்கியத்துவமுடைய ஒரு முனை” என்றும் கூறுகிறார். நாங்கள் இந்தியாவின் வாசல் படியில் இருக்கிறோம். சீனா எங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்தியாவிடமிருந்து வரக்கூடிய எந்தஒரு பலப்பிரயோகத்திலிருந்தும் சிறிலங்காவை பாதுகாப்பதற்கு வேண்டிய வான்படையோ கடற்படையோ சீனாவிடம் இப்பொழுதும் இல்லை. இன்னும் சில ஆண்டுகளிலும் இருக்கப்போவதில்லை என்ற தொனிப்படவும் தயான் ஜயதிலக கூறியிருக்கிறார். மார்ச் மாதம் 28ஆம் திகதி டெய்லி மிரருக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

ஆனால், இலங்கை அரசாங்கமோ மிக நுட்பமான, பொறியைப் ஒத்த ஒரு போட்டிக் களத்தை இச்சிறு தீவினுள் திறந்து வைத்துள்ளது. இரு பிராந்திய பேரரசுகளிற்குமிடையிலான தாழ்நிலை பனிப்போர்க் களமொன்றை இச்சிறுதீவினுள் உருவாக்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது பேரம்பேசும் சக்தியை கிழிறங்காமல் பார்த்துக்கொள்ள முற்படுகிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை போட்டியிலிருந்து பின்வாங்கவும் முடியாது. தோற்றுப்போகவும் முடியாது. அதேசமயம் கடந்த நான்காண்டுகளில் வெல்லத் தேவையான புதிய தெரிவுகளை உருவாக்கவும் முடியவில்லை.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்கத் தவறியது சிங்களவரும், தமிழரும், முஸ்லிம்களும் மட்டுமல்ல பிராந்திய பேரரசான இந்தியாவும்தான்.
29-03-2013

One Comment add one

  1. muththu says:

    மிக எளிமைப்படுத்தப்பட்ட ஆய்வு. வரலாற்றை `நான்கு ஐந்து` தனிநபர்களின் முடிவாக குறுக்கிவிடும் தவறான நோக்கு. //உள்நாட்டு யதார்த்தம், பிராந்திய யதார்த்தம், அனைத்துலக யதார்த்தம்// எது அல்லது எவை என்று கூறாது அலட்சியத்துடன் நகரும் கட்டுரை. உள்நாட்டு மூலதனம், பிராந்திய மூலதனம், அனைத்துலக மூலதனம் இவற்றினதும் இவைகளிற்கிடையிலானதுமான ஊடாடல் அறவே புறக்கணிக்கப்பட்ட அவசரமான படைப்பு. பிராந்திய, சர்வதேசிய பொருளாதார, அரசியல்+இராணுவ கூட்டமைப்புக்கள் பற்றிய பார்வைகளையும் உள்ளடக்கி, கட்டுரையை மீளாய்விற்குட்படுத்தி வளர்த்தெடுக்கும் ஆற்றல் படைப்பாளியிடம் நிறையவே உண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *