மூன்றாவது ஆயிரமாண்டு
அது அநேகமாக எங்களுடையது
எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில்
அது பிறந்து வளர்ந்தது
ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும்
அது மீண்டெழுகிறது
மீட்பின் ரகசியமென.
இனி அறிவேயெல்லாம்
அறிவே சக்தி
அறிவே பலம்
அறிவே ஆயுதம்
புத்திமான் பலவான்
வருகிறார் மீட்பர்
பரசேயரும் சதுசேயரும் பரபரக்கிறார்கள்
அவர்கள் பழைய யுகத்தவர்கள்
நாங்கள் அகதிகளாயிருந்தபோது
அந்தரித்துத் திரிந்தபோது
யாருக்கும் தெரியாமலே
மூன்றாவது ஆயிரமாண்டு
கர்ப்பத்திலுதித்தது
பரசேயருக்கும் சதுசேயருக்கும்
இது தெரியாது
அவர்கள் மீட்பருக்காக
அந்தப்புரங்களில் காத்திருக்கிறார்கள்
ஆட்டுத்தொழுவத்தில்
அற்புதங்கள் நிகழுமென்று
அவர்களுடைய வேதப்புத்தகங்களில்
சொல்லப்படவில்லைப் போலும்
சிலுவையும் சவுக்குமன்றி
முள்முடியும் வெறுப்புமன்றி
வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது
அறிவு கனிந்தெழும் போது
அதனொளியில்
எரிந்து சாம்பலாகப் போகும்
அற்பப் பூச்சிகளாயிருக்கிறார்கள்
அறிவு சக்தியாகத் திரண்டு
யுகங்களையும் உலகங்களையும்
ஜெயிக்க வரும் வேளை
அவர்கள் குருடராயும் செவிடராயுமிருப்பார்கள்
குழந்தை நூற்றாண்டின் நற்செய்தி
அவர்களைச் சென்றடையாது
அதோ
இப்பாழுதுமவர்கள்
கள்ளத்தீர்க்கதரிசிகளின் பின்னே
திரிகிறார்கள்
அவர்கள் போகட்டும்
நரகத்துக்கே போகட்டும்
சிங்கங்களே வாருங்கள்
சிங்கங்களே சிங்கங்களைச் சேருங்கள்
புண்ணிய நதிகளில் குளியுங்கள்
சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்
பாவியாடுகளே தப்பியோடுங்கள்
பொய்த்தீர்க்க தரிசிகளே
நரகத்துக்குப் போங்கள்
புதுயுகம் வருகிறது
ஒரு புது ஆயிரமாண்டு பிறந்து விட்டது
08.09.2K
மல்லாவி
Add One