Google

தேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும்

Written on:September 15, 2013
Comments
Add One

தேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும்;
மாகாணசபை தேர்தல் பரப்புரைக்களத்தில் ஒரு இனமான அலையை தோற்றுவிப்பதில் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறிவருவதாகவே தோன்றுகின்றது. தனிப்பட்ட முறையில் கடிதங்கள், குறுந்தகவல்கள் என்பன படித்த வாக்காளர்களை நோக்கிப் பறந்து வந்துகொண்டிருக்கின்றன. இணையப்பரப்பில்தான் கூடுதலான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் இணையப்பரப்பில்தான் விவகாரங்கள் அதிகம் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால் வழமையான கறுப்புவெள்ளை அரசியலின் பிரகாரம் இணையப்பரப்பானது அதிகமதிகம் வசைவெளியாக மாறியிருக்கிறது.

ஒப்பீட்டளவில் அதிகபட்ச விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் ஒப்பீட்டளவில் அதிகபட்சம் ஜனநாயகமானதாக இணையப்பரப்பு தோன்றுகின்றது. ஆனால் அதேசமயம் அந்த அதிகரித்த ஜனநாயகமே அதிகரித்த அளவில் தனிப்பட்ட தாக்குதல்களிற்கும் அவதூறுகளிற்குமுரிய அருவருப்பான ஒரு விவாதப்பரப்பையும் திறந்து வைத்திருக்கிறது. கூடுதலான ஒரு ஜனநாயகப்பரப்பில்தான் கூடுதலான நாகரிகமற்ற விவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன. பொதுவெளி நாகரிகம் எனப்படுவது ஒரு சமூகத்தின் அகஜனநாயகப் பாரம்பரியத்தின் பாற்பட்டது. அந்த சமூகத்தின் பண்பாட்டுச் செழிப்பில் அது தங்கியிருக்கின்றது. ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் குறிப்பாக மே 19 இற்கு பின்னர் அத்தகைய செழிப்பான ஒரு பண்பாட்டின் பிரஜைகளாகத் தங்களை நிருபிக்கத்தவறிவிட்டார்கள்;. இப்பொழுது மாகாணசபை பரப்புரைக்களத்திலும் அதைக் காண முடிகின்றது.

இணையப்பரப்புடன் ஒப்பிடுகையில் அச்சு ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் வரையறுக்கப்பட்;ட விவாதப்பரப்புக்களே திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஒப்பீட்டளவில் நாகரிகமானவை. ஈ.பி.டி.பியின் முதன்மைவேட்பாளர் ஒரு பகிரங்க விவாதத்திற்கு அழைப்புவிட்டிருந்தார். அதுபோலவே டான் ரிவியும் எல்லாக் கட்சிகளையும் அப்படி ஒரு பகிரங்க விவாதத்தைச் செய்ய வருமாறு அழைப்புவிட்டதாக ஒரு தகவல் உண்டு.

ஆனால் ஈ.பி.டி.பியின் தினமுரசுப் பத்திரிகை மற்றும் டான் ரிவி இவற்றுடன் புதிதாகத் தோன்றியிருக்கும் தீப்பொறி பத்திரிகை தவிர ஏனைய பெரும்பாலான பத்திரிகைகள் கூட்டமைப்பிடம் பரிவுடன் காணப்படுகின்றன. படித்த தமிழ் மத்தியதர வர்க்கத்தின் நாடித்துடிப்பை பிரதிபலிக்கின்ற, அவர்களுடைய அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல மேற்படி ஊடகங்கள் கட்சிச் சாய்வுடன் காணப்படுவதனாலும் மாகாணசபை பரப்புரைக் களத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வித பெருப்பிக்கப்பட்ட தோற்றம் உருவாகின்றது. இது கூட்டமைப்பிற்கு ஒரு இன அலையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உதவுகின்றது. நவிப்பிள்ளையின் வருகை இதில் ஒரு போனஸ் எனலாம். அவருடைய வருகையையொட்டி காணாமல் போனவர்கள் தொடர்பில் ஓர் உணர்வெழுச்சியான அரசியல் சூழல் தோன்றியது. அதன் இறுதி விளைவும் கூட்டமைப்பிற்கே சாதகமாக மாறியது.

ஆனால் கடந்த நான்காண்டுகளாக தனது உயர்பீடத்தை புலிநீக்கம் செய்வதன் மூலம் மென்தமிழ் தேசியத்திற்கு தலைமைதாங்க முற்படும் கூட்டமைப்பானது பரப்புரைகளின் தொடக்கத்தில் சற்று அடக்கியே வாசித்தது. எனினும் போட்டிப்பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியபோது அது அதன் இயல்பான வளர்ச்சிப்போக்கில் இனமான உணர்ச்சிகளைத் தூண்டுமொன்றாக மாறியது. இதில் மென்தேசியவாதிகளாகவும் புலிச்சாயம் இல்லாதவர்களாகவும் கருதப்பட்ட முக்கியஸ்தர்களும் கூட இனமான உணர்ச்சிகளிற்கு எண்ணைவார்க்கத் தொடங்கியபோது அதுவரையிலுமிருந்துவந்த தயக்கம் நீங்கப்பெற்று மாகாணசபை வேட்பாளர்களும் அடிமட்டத் தொண்டர்களும் முழுவேகத்தோடு இனமான அரசியலை பேசத் தொடங்கிவிட்டார்கள். இப்பொழுது பரப்புரைக்களமானது ஏறக்குறைய இனமான உணர்ச்சிகளை உருவேற்றுமொன்றாகவே மாறிவிட்டது.

இன்று இக் கட்டுரையின் பிரதான பேசுபொருள் கூட்டமைப்பின் பரப்புரை உத்திகளைப்பற்றியது அல்ல. மாறாக அப்பரப்புரையின் மையப்பொருள் பற்றியதே. அதாவது இனமான அரசியல் பற்றியதே.

தேர்தல் பரப்புரையில் இனமான அரசியலை முன்னெடுப்பது என்பது இதுதான் முதல்தடவையல்ல கடந்த அரை நூற்றாண்டுக்;கு மேலான தமிழ் வாக்குவேட்டைப் பாரம்பரியம் எனப்படுவதே அதுதான். தவிர அது ஒரு தமிழ் உத்தி மட்டும் அல்ல. அது ஒரு சிங்கள உத்தியும் கூட. முஸ்லீம் உத்தியும் கூட. இதை இன்னும் துலக்கமாகக் கூறின் சிங்கள இனமான அரசியலின் தவிர்க்கவியலாத ஒரு தர்க்கபூர்வ விளைவே தமிழ் இனமான அரசியல் எனலாம்.

ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தீவின் இனமான அரசியலைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்ட காலம் ஒன்றைத்தவிர அதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்களில் அனேகமாக சிங்கள இனமான அரசியலே செயல்திறன் மிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் காணப்பட்டது. இப்பொழுதும் காணப்படுகிறது. மேலும் ஆயுதப்போராட்டத்தை இறுதியில் தோற்கடித்த தரப்பு அது என்பதன் அடிப்படையிற் கூறின் சிங்கள இனமான அரசியலானது தமிழ் இனமான அரசியலைவிடவும் செயல்திறன்மிக்கது எனலாம். இதைச் சிறிது ஆழமாகப் பார்க்கலாம்.

ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய தமிழ் இனமான அரசியல் எனப்படுவது வாய்ச்சொல் வீரர்களின் அரங்காகவே பெருமளவிற்கு காணப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது அது செயலுக்குப்போகும் அரசியலாகக் காணப்பட்டது. ஆனால் அதுகூட தனது இலட்சியத்திற்காக ஒரு கட்டத்திற்குமேல் அர்ப்பணிப்பிற்குத் தயாரற்றிருந்த ஒரு காலகட்டம்தான்.

ஒரு மூத்த சத்தியாக்கிரகி ஒரு முறை சொன்னார் “இப்பொழுது ஆயுதம் ஏந்திப்போராடும் இளைஞர்களைப்போல ஒரு ஐநூறு பேராவது அப்போது எங்களோடு இருந்திருந்தால் அடுத்த தலைமுறையிடம் போராட்டம் கையளிக்கப்பட்டிருக்காது” என்று. அதோடு சத்தியாக்கிரகம் ஒரு கட்டத்திற்குமேல் போக முடியாது என்ற ஒரு நிலை தோன்றியபோது அதை அரசாங்கமே வந்து குழப்பும் விதத்தில் அரசாங்கத்தை தூண்டும் சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனவே சத்தியாக்கிரக காலத்தைத்தவிர அநேகமாக அதன் பின்னரான மிதவாத அரசியலெனப்படுவது செயலுக்குப்போகத் தயாரற்ற இனமான அரசியலாகவே காணப்பட்டது.

ஆனால் சிங்கள இனமான அரசியலில் அப்படி இருக்கவில்லை அரசினை உடைய ஒரு தரப்பு என்பதால் இது எப்பொழுதும் வினைத்திறன் மிக்கதாகவும் தந்திரமானதாகவும் நீண்டகால இலக்குகளைக் கொண்டதாகவும் இருந்தது. தமிழ் இனமான அரசியலானது செயலற்ற கையாலாகாத ஒன்றாகக் காணப்பட்ட ஒரு அரசியல் அரங்கில் சிங்கள இனமான அரசியலானது செயல் ப+ர்வமானதாக காணப்பட்டது. வீச்சான மூர்க்கமான நிறுவனமயப்பட்ட சிங்கள இனமான அரசியலுக்குமுன் தமிழ் இனமான அரசியலின் செயலின்மையும் கையாலாகத்தனமும் வெளிப்படையாகத்தெரிந்தன. சிங்கள அப்புக்காத்துமார் தமிழ் அப்புக்காத்துமார்களை விடவும் கெட்டிக்காரர்களாயிருந்தனர்.

இத்தகைய பின்னணியில் தான் தமிழ் மிதவாதத்தின் செயலின்மை, கோழைத்தனம், கையாலாகாத்தனம் என்பவற்றின் மீது சலிப்பும் வெறுப்புமுற்ற இளைஞர்கள் மிதவாதிகளைக் கடந்து செல்லத் தொடங்கினர். தான் உற்பத்தி செய்த ஆயுதப் போராட்டத்திற்கு தலைமைதாங்க திராணியற்றிருந்த தமிழ் மிதவாதம் அரங்கின் பின்னணிக்குத் தள்ளப்பட்டது. அதன்பின் சுமாராக மூன்று தசாப்தங்களிற்கு ஆயுதப் போராட்டமே தமிழ் இனமான அரசியலை முன்னெடுத்தது. அது முழுக்க முழுக்க செயல் பூர்வ அரசியல். செயலற்ற வாய்ச்சொல் வீரர்களையும் புத்திஜீவிகளையும் படைப்பாளிகளையும் அது கதைகாரர் என்று இகழ்ந்தது. தமிழ் இனமான அரசியல் வரவாற்றில் சொல்லைவிட செயலே புனிதமானதாகக் கருதப்பட்ட ஒரு காலகட்டம் அது.

ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது மறுபடியும் சிங்கள இனமான அரசியலின் செயல்திறன் இரத்தம் சிந்தி நிருபிக்கப்பட்டது. தமிழ் அப்புக்காத்துமாரை மட்டுமல்ல நவீன தமிழ் வீரத்தையும் கூட தோற்;கடிக்கும் அளவிற்கு சிங்கள இனமான அரசியல் செயற்றிறன் மிக்கதாக காணப்படுகின்றது. அதாவது செயலுக்குப் போகாத மிதவாதிகளானாலும் சரி யுத்தகளத்தில் பெரும் செயல்களைச் செய்த ஆயுதப் போராட்டமானாலும் சரி சிங்கள இனமான அரசியலே இறுதிவெற்றி பெற்றுள்ளது.

ஆனால் சிங்கள இனமான அரசியல் அநேகமாக வெற்றிபெறமுடியாத ஒரு களம் உண்டு. அதுதான் தேர்தல் களம். அது எவ்வளவுதான் சாதுரியமானதாகவும் செயலூக்கம் மிக்கதாகவும் காணப்பட்ட போதிலும் அதனால் வட-கிழக்கு தேர்தல் களங்களில் தமிழ் இனமான அரசியலை முற்றாகத் தோற்கடிக்க முடிந்ததே இல்லை. கடந்த சுமார் அரை நூற்றாண்டிற்கும் மேலான இனமான அரசியல் யதார்த்தம் அது. அதில் தமிழ் தரப்பு பெறும் வெற்றியின் விகிதம் வேறுபடலாம். ஆனால் ஒரு இனமான அலை அல்லது இன அடையாள எழுச்சி அல்லது அரசிற்கு எதிரான ஒரு அலை தோற்றுவிக்கப்படுமிடத்து தமிழ்த் தரப்பிற்கே வெற்றிவாய்ப்புக்கள் பிரகாசிக்கின்றன. அதாவது சிங்கள இனமான அரசியலானது பூரண வெற்றியைப் பெறமுடியாத ஒரு களமாக தேர்தல் களமே காணப்படுகின்றது.

எனினும் தேர்தலில் மட்டும் தோற்கடிக்க முடியாத தமிழ்த் தரப்பை நாடாளுமன்றத்தி;ற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் வெற்றிகரமாக தோற்கடித்தே வந்திருக்கிறார்கள். அல்லது தேர்தலிற்கு பின்னரான இரகசியப் பேரங்களின் மூலம் தோல்வியின் தாக்கத்தை குறைப்பதற்கு முயற்சித்திருக்கிறார்கள். இதை இன்னமும் தெளிவாக கூறின் தேர்தல்களில் தோற்றாலும் கூட சிங்கள இனமான அரசியலானது தமிழர்களை மற்றெல்லா அரங்குகளிலும் ஏதோ ஒரு விதத்தில் தோற்கடித்தே வந்துள்ளது.

இத்தகைய ஒரு வரலாற்றனுபவத்தின் பின்னணியில் வைத்தே மாகாண சபைத் தேர்தலையும் பார்க்கவேண்டும் தமிழ் இனமான அரசியலின் செயற்றிறன் மிக்க ஒரு வளர்ச்சியான ஆயுதப்போராட்டத்தை தோற்கடித்த ஓர் அரசாங்கமானது மென்தேசியவாதிகளை எப்படி எதிர்கொள்ளும்?

sri-lanka-northern-provinceமாகாண சபைத் தேர்தலில் சிங்கள இனமான அரசியல் வெல்கிறதோ இல்லையோ தேர்தலை நடத்தி முடித்தாலே அது அவர்களிற்கு வெற்றிதான். ஒரு விமர்சகர் கூறியது போல கூட்டமைப்பு வென்றாலும் சரி தோற்றாலும் சரி அது அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு முதற்கட்ட வெற்றிதான். எப்படியெனில்…. கூட்டமைப்பு வென்றால் தமிழ் அரசியலை 13வது திருத்தத்திற்குள் பெட்டிகட்ட முயற்சிக்கலாம் அதோடு தமிழர்களிற்கு ஏதோ ஒரு விகிதமளவிற்கு அதிகாரம் பகிரப்பட்டுவிட்டதாக வெளியுலகை நம்பவைக்கலாம். அல்லது கூட்டமைப்பு தோற்றால் அதாவது அரசாங்கம் வென்றால் தமிழர்கள் தங்களுடைய பக்கம்தான் நிற்கிறார்கள் என்று வெளியுலகிற்கு எடுத்துக் காட்டலாம். ஆனால் உணர்ச்சிகரமான இனமான தேர்தல் களத்தில் தனக்கு இருக்கக்கூடிய வரையறைகளை அரசாங்கம் விளங்கிவைத்திருக்கும். எனவே தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்த்தரப்பின் வெற்றியின் பருமனை எப்படிக் குறைக்கலாம் என்பது பற்றியோ அல்லது தேர்தலிற்குப் பின் அவர்களை எப்படித் தோற்கடிப்பது என்பது பற்றியோதான் அரசாங்கம் சிந்திக்கும். கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலான இனமான அரசியலின் போக்கு அதுதான்.

அதேசமயம் தமிழ் மிதவாதத்தைப் பொறுத்தவரை அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்பிருந்த மிதவாதத்தால் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு செய்முறைக்கு இப்பொழுது கூடுதல் அழுத்தம் கொடுக்க முற்படுவதைக் காணலாம். அதுதான் இராஜதந்திரப் போர். அதுகூட ஆயுதப் போராட்டத்தின் விளைவே. மாகாணசபைத் தேர்தலில் தமக்கு கிடைக்கக்கூடிய மக்கள் ஆணையின் பின்பலத்தோடு ஒரு இராஜதந்திரப் போரை முடுக்கிவிடப்போவதாக கூட்டமைப்பு கூறிவருகிறது. எந்த ஒரு இனமான அரசியலை வைத்து வாக்கு கேட்கப்படுகிறதோ அந்த இனமான அரசியலுக்கு ஆகக்கூடியபட்சம் விசுவாசமாக இருந்தால் தான் அப்படி ஒரு இராஜதந்திரப் போர் சாத்தியம். மாறாக தேர்தல் காலத்து பரப்புரை உத்தியாகவே இனமான அரசியல் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மென்தேசியவாதமானது தனது சொந்த வாக்குறுதிகளை தானே தின்னப்போகிறது என்று அர்த்தம். அனைத்துலக அரங்கில் மட்டுமல்ல தனது சொந்தச் சனங்களிற்கும் தந்திரம் செய்யப்போகிறது என்று அர்த்தம். அது அதன் இறுதி விளைவாக சிங்கள இனமான அரசியலுக்கே வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்கும். அதாவது சிங்கள இனமான அரசியலானது நந்திக் கடற்கரையில் அது பெற்ற ஆகப்பெரிய படைத்துறை வெற்றிக்குப்பின் பெறப்போகும் துலக்கமான ஓர் அரசியல் வெற்றியாக அது அமையக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *