Google

தமிழர்களுக்கு யார் பொறுப்பு?

Written on:February 9, 2014
Comments
Add One

ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்க நெருங்க நாடு உளவியல் ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு செல்கிறது. சிங்கள மற்றும் தமிழ் பொதுசன உளவியல்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, ஜெனிவா உளவியலைக் கருதிக் கூறுமிடத்து நாடு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது எனலாம்.

ஒரு புறம் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பயப்பிராந்தி (fear psychosis) தோற்றுவிக்கப்படுகிறது. ரத்தம் சிந்திப் பெறப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தட்டிப் பறிக்க முற்படும் வெளிச்சக்திகளையிட்டு உண்டான ஒரு பயப் பிராந்தி அது. தென்னிலங்கையில் வெற்றிநாயகர்களாக வலம் வரும் படைத்தரப்பை, அனைத்துல அரங்கில் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்த முற்படும் வெளிச்சக்திகளின் மீதான கோபம் அது.

வெளியாருக்கு எதிரான அச்சமே சிங்கள் அரசியலின் உள் ஊக்க விசையெனலாம். விமர்சகர்களால் வியபபுடன் பார்க்கப்படும் சிங்கள ராஜதந்திரப் பாரம்பரியம் எனப்படுவதும் அந்த வெளியாருக்கு எதிரான அச்சத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதொன்றுதான். சேர் ஐவர் ஜெனிங்ஸ் ஒரு முறை கூறியதுபோல ”தமக்கருகில் இருக்கும் ஒரு பெரிய பனிமலை எந்த வேளையும் உருகி தங்களை முழ்கடித்துவிடலாம் என்ற பல நூற்றாண்டுகால அச்சத்தின்’ தொடர்ச்சி இது.

சேர் ஐவர் ஜெனிங்ஸ் கூறிய பனிப் பாறை எனப்படுவது இந்தியாதான். ஆனால், இப்பொழுது இந்தியா மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக வெள்ளைக்கார நாடுகளும் அங்கு புகலிடம் கோரி வாழும் தமிழ் டயஸ்பொறாவும் அச்சுறுத்தல்களாக உருவாகியிருக்கின்றன. எனவே, சிங்கள அரசியலின் இயங்குவிசையாகக் காணப்படும் அந்த மிக ஆதியான அச்சமானது இப்பொழுது அதன் மிக நவீன வடிவத்தை அடைந்திருக்கிறது. ஒவ்வொரு ஜெனிவாக் கூட்டத் தொடரின்போதும் அது அதன் உச்சத்தைத் தொடுகிறது.

வெற்றிபெற்ற எல்லாச் சிங்கள அரசத் தலைவர்களும் மேற்படி அச்சத்தை வெற்றிகரமாகக் கையாண்டு அதைத் தமது முதலீடாக்கியவர்கள்தான். இப்போதுள்ள அரசாங்கமும் அதைத்தான் செய்து வருகின்றது. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் அதேசமயம், அந்த கிடைத்தற்கரிய ஒரு வெற்றியைத் தட்டிப்பறிக்க முற்படும் வெளிச் சக்திகளுக்கு எதிராகவும், வீரமாகப் போராடும் ஓர் அரசாங்கமாக இது தன்னைக் கட்டியெழுப்பியிருக்கிறது. எனவே, சிங்கள வெகுசனத்தின் அச்ச உளவியலானது எவ்வளவுக்க்கெவ்வளவு தூண்டப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அது இந்த அரசாங்கத்திற்கு ஆதாயம்தான். ஏனெனில், அந்த அச்சம்தான் அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக இந்த அரசாங்கத்துக்கான ஆதரவுத் தளமாகவும் மாறிவருகின்றது. எனவே, ஜெனிவாவை நோக்கி உருவாகிவரும் அச்ச உளவியலின் பின்னணியில் பால்மாக்களின் விலை உயர்வு சிங்கள வெகுசனத்தை எந்தளவுக்குத் தீண்டும்?

பொதுச் சிங்கள உளவியல் இவ்வாறிருக்க, பொதுத் தமிழ் உளவியல் எவ்வாறிருக்கிறது? ஏற்கனவே கூறப்பட்டது போல அது முற்றிலும் எதிர்த்துருவத்தில் நிற்கின்றது. அது கடந்த சில ஆண்டுகளாக முழுக்க முழுக்க வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. பிரயோகிக்கப்படவியலாத ஒரு கோபத்தோடு பழிவாங்கத் துடிக்கும் ஒரு காயக்காரரின் மனோநிலைக்கு நிகரானது அது. அரசாங்கத்தை எதுவிதத்திலாவது தண்டித்துவிட வேண்டும் என்று அது தவிக்கின்றது. ஆனால், வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் நான்காண்டுகளிலும் உருவாகி வந்த ஒரு தோற்றப்பாடு அல்ல. அதுவும் சிங்கள அச்ச உளவியலைப் போல, மிகப் பழைய வேர்களையுடையதுதான். அதற்கும் ஏறக்குறைய சிங்கள அச்ச உளவியலின் அதே வயது தான். இரண்டுமே கூடப் பிறந்த குழந்தைகள்தான். ஒன்று மற்றதின் விளைவுதான். பெரிய இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டை சிறிய ஈழத்தமிழர்கள் தமது பிரதான பின் பலமாக நம்பத் தொடங்கிய ஒரு காலத்திலிருந்து அது வருகிறது.

நவீன அரசியலில், குறிப்பாக, இன முரண்பாடுகள் கூர்மையுறத் தொடங்கிய காலங்களில் இந்தியா வந்து தீர்வைப் பெற்றுத் தரும் அல்லது நாட்டைப் பிரித்துத் தரும் என்று நம்பியபோது அது இந்தியாவுக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலாக உருவாகியது. ஆனால், இந்திய – இலங்கை உடன்படிக்கைக்குப் பின் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகளால் அது மேற்கை நோக்கிக் காத்திருப்பதாகவும் மாறியது. இப்பொழுது 2009இற்குப் பின் அது பொதுவாக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஜெனிவாக் கூட்டத் தொடர்களையொட்டி இக்காத்திருப்பானது பெருகிச் செல்லக் காணலாம்.

இயல்பானதொரு காத்திருப்புப் பாரம்பரியம் உண்டென்றபோதிலும் ஊடகங்களும், விமர்சகர்களும், அரசியல்வாதிகளும் அதை அளவுக்கு மிஞ்சி பெருப்பிப்பதாகவே தோன்றுகிறது. இது விசயத்தில் ஊடகங்கள் மத்தியில் ஒருவித அகமுரண்பாட்டை அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஒரு புறம் தலைப்புச் செய்திகளில் அவற்றின் பரபரப்பு, விறுவிறுப்புத் தேவைகளுக்காக மேற்படி காத்திருப்பு உளவியல் தூண்டப்படுகிறது. இன்னொரு புறம் ஆசிரியர் தலையங்கங்கள், பத்திகள் மற்றும் கட்டுரைகளில் ஜெனிவா ஒரு மாயை என்ற தொனிப்பட வரும் எழுத்துக்களையும் காண முடிகிறது.

Kiliஇது ஊடகப் பரப்பில் நிலவும் ஒரு அகமுரண்பாடு மட்டுமல்ல, முழுத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இந்த முரண்பாடு உண்டு. ஒரு புறம் வெளியாருக்காகக் காத்திருத்தல் மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாகக் காத்திருந்து என்ன கிடைத்தது என்ற கேள்விக்கான விடையைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைக்கும் ஏமாற்றமும், சலிப்பும். ஆனால், இவ்விதமாக தானே தனக்குள் முரண்பட்டுக்கொண்டாலும்கூட இதிலிருந்து விடுபட முடியவில்லை என்பதுதான் இங்குள்ள மிகத்துயரமான ஒரு நிலையாகும். இதற்குப் பிரதான காரணம் இயலாமைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஏறக்குறை வெளியாரின் நிகழ்ச்சி நிரலின் பின் ஒடுவது என்றாகிவிட்டது.

தமிழ் மக்களின் அரசியல் எப்படி வெளியாரின் நிகழ்ச்சி நிரலின் பின் செல்கிறது என்பதை ஜெனிவாவை நோக்கிச் செல்லும் நாட்களில் நிகழும் சந்திப்புக்களின்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தமிழ அரசியல்வாதிகள் அல்லது தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது என்ன கூறுகிறார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். கடந்த ஆண்டுக்கு முதல் ஆண்டு கூட்டமைப்பு ஜெனிவாவிற்குப் போகவில்லை. அதற்கு உள் மட்டத்தில் கூறப்பட்ட காரணம் சக்திமிக்க நாடுகள் அவ்வாறு கூறின என்பதாகும். நீங்கள் வரவேண்டாம் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாமா?

இது போலவே கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன அமெரிக்க பிரதிநிதிகளில் ஒருவர் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் உரையாடியபோது ”நாங்கள் இறுக்கிப் பிடித்தால் அரசாங்கம் சீனாவை நோக்கிச் சென்றுவிடும’ என்று கூறியிருந்தார். இம்முறையும் சில கிழமைகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவரான ஸ்ரீவ் ரஃப்பும் அவ்வாறு கூறியிருக்கிறார். அரசாங்கத்தை மேலும் நெருக்கினால், அது சீனாவை மேலும் நெருங்கிச் செல்லும் என்றும் இதனால், அரசாங்கத்தின் மீதான தமது பிடி – leverage – குறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இடத்தில் இக்கட்டுரை சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறது. அவை சில சமயம் குதர்க்கமாகவோ அல்லது யதார்த்தமற்றவைகளாகவோ இருக்கலாம். ஆனால், இந்நாட்களில் அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் அவை.

கேள்வி ஒன்று: அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கூட்டினால் அது மேலும் சீனாவை நோக்கிச் சென்றுவிடும் என்பதை ஏன் தமிழர்களுக்குக் கூறவேண்டும்?

கேள்வி இரண்டு : அரசாங்கம் சீனாவை நோக்கிச் செல்வது தமிழர்களுக்குப் பிரச்சினையா? அதனால் தமிழர்களுக்கு என்ன தீமை?

கேள்வி மூன்று: அது மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தானே பிரச்சினை?

கேள்வி நாலு : அவர்களுடைய பிரச்சினையை ஏன் தமிழர்களுடைய பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்?

கேள்வி ஐந்து : சீனா தமிழர்களுக்கு எதிரானது என்ற ஒரு எடுகோளின் மீதா இப்படியொரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறது?

கேள்வி ஆறு : ஆனால், போரின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திற்கு அதிகம் உதவியது சீனாவா அல்லது சீனாவைத் தமிழர்களுக்கு எதிரான ஒரு தரப்பாக உருவகிக்கும் ஏனைய நாடுகளா?

இக்கேள்விகளுக்கான விடை தேடிப் போனால், ஜெனிவாவைச் சூழ்ந்திருக்கும் மாயைகளை களைய முடியும். தமிழர்கள் எப்பொழுதும் தமிழ்நாடு காரணமாக இந்தியாவுக்குச் சாய்வாகவே சிந்திப்பார்கள் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் தான் மேற்கத்தைய ராஜதந்திரிகள் மேற்கண்டவாறு கூறி வருகிறார்கள். ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும்கூட மறக்கக் கடினமான கசப்பான ஒரு இறந்த காலம் இருந்தாலும்கூட இந்தியாவா? சீனாவா? என்று முடிவெடுக்க வேண்டிவரும்போது தமிழர்கள் இந்தியாவை நோக்கியே திரும்புவார்கள் என்ற ஒரு எடுகோளின் மீதே இப்படியெல்லாம் கூறப்படுகின்றது.

இது காரணமாகவே அவர்கள் அனைத்துலக அரங்கில் தமிழ் அரசியலைத் தத்தெடுத்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது தமிழர்களை மேலும் மாயைக்குள் மூழ்கிச் செய்துவிடுகிறது. ஜெனிவா யதார்த்தத்தைவிடவும் ஜெனிவா மாயையே பெரிதாக்கிக் காட்டப்படுகிறது. இதனால், வெளியாருக்காகக் காத்திருத்தல் எனப்படுவது வெளியாரிடம் தம்மை முழுக்க ஒப்புக்கொடுக்கும் ஒரு வளர்ச்சிக்குப் போகக் கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது.

வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது வெளியாரை நம்புவதிலிருந்தே தொடங்குகிறது. வெளியாரை நம்புவது என்பது மறுவளமாக தன் பலத்தை, தனது பேரம் பேசும் சக்தியை தானே நம்பாததொரு நிலைதான். இது இப்படியே போனால், தமிழர்கள் தன்னம்பிக்கையிழந்த ஒரு மக்கள் கூட்டமாக மாறிவிடுவார்கள். இது மிகத்துயரமானதொரு நிலை.

இத்துயர நிலைக்கு யார் பொறுப்பு? ஒரு சமூகம் கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் போகும் வழி தெரியாது தடுமாறுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு சமூகம் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை நன்கு பட்டுணர்ந்த பின்னும் மாயைகளின் பின் இழுபடுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு?

அண்மையில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது யாழ்;ப்பாணத்தின்; மிக முக்கிய நாடகச் செயற்பாட்டாளர் ஒருவர் கேட்டார், ”தமிழ் மக்களுக்கு இப்பொழுது யார் பொறுப்பு?’ என்று. ஜெனிவாவை நோக்கி பெருகிவரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து பார்க்கும்போது அந்த கேள்வி மேலும் பலமாக எதிரொலிக்கின்றது. ‘தமிழர்களுக்கு யார் பொறுப்பு?’

இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இத்துயர நிலைக்குப்; பொறுப்பேற்க வேண்டும். எல்லாப் புத்திஜீவிகளும், படிப்பாளிகளும் ஆய்வாளர்களும், படைப்பாளிகளும், ஊடகவியலாளர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் பொறுப்புக் கூறவேண்டும்.

கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக வெளிநோக்கிக் காத்திருப்பதை விடவும் கூடுதலாக உள்நோக்கி தங்களைப் பலப்படுத்தும் வழிகளில் தமிழர்களை யாரும் வழி நடத்தாதது ஏன்?

தமிழர்கள் தங்களுடைய பேரம் பேசும் சக்தியைப் பலப்படுத்தினாற்தான் வெளியாரைத் தங்களை நோக்கி வளைக்கலாம். இல்லையென்றால், வெளியாரை நோக்கித் தமிழர்களே வளைய வேண்டியிருக்கும். இப்பொழுது நிலைமை ஏறக்குறைய அப்படித்தான் காணப்படுகிறது என்பதாற்றான், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெளித் தரப்புக்கள்; சீனா என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களைச் சமாளிக்க முற்படுகின்றன. எனவே, தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியைப் பெருக்க வேண்டும். அதை எப்படிச் செய்வது?

அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. மற்றவையெல்லாம் நரகத்தை நோக்கிப்போகும் வழிகள்தான். அந்த ஒரேயொரு வழி எனப்படுவது ஐக்கியம்தான். அதாவது களம், புலம், தமிழகம் ஆகிய மூன்று தளங்களையும் ஒன்றிணைக்க வல்லதும், இம்மூன்று தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதும், ஜனவசியம் மிக்கதுமாகிய ஒரு தலைமை அல்லது கட்சி அல்லது அமைப்பு மேலெழ வேண்டும். அப்பொழுதுதான் சிதறிக் கிடக்கும் தமிழ் சக்தி ஒன்று திரளும். தமிழ் நிதி ஒன்று திரளும். தமிழ் அறிவு ஒன்று திரளும். வெளியார் தமிழர்களைக் கையாள்வதற்குப் பதிலாக தமிழர்கள் வெளியாரைக் கையாளும் ஒரு காலம் கனியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *