Google

ஜெனிவாவை எதிர்கொள்ளல்

Written on:February 17, 2014
Comments
Add One

அண்மையில் லண்டனில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளரான ஒரு நண்பர் கேட்டார். தமிழ்நாட்டிலுள்ள தீவிர தமிழ்த்தேசிய இயக்கங்களும், கட்சிகளும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அதேசமயம், கூட்டமைப்புக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றன. தாய் தளத்தில் துலக்கமான மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சியை கடுமையாக விமர்ச்சிப்பதற்குரிய உரிமையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள்? என்று…. ”அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு’ என்று நான் சொன்னேன். ஒன்று கூட்டமைப்பின் கையாலாகாத் தனம் அல்லது அதன் அரை இணக்க அரசியல் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி. இரண்டாவது தமிழ் டயஸ்பொறாவிலுள்ள தீவிரமான தரப்புக்களுடனான உறவு. இவை இரண்டின் காரணமாகவும் அவர்கள் கூட்டமைப்பை விமர்ச்சிப்பதற்குரிய துணிச்சலைப் பெறுகின்றார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் மேற்படி தமிழ் நாட்டிலுள்ள தீவிர தேசியவாத சக்திகள் தமது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார்கள். குறிப்பாக மாகாணசபைத் தேர்தலையொட்;டி கூட்டமைப்பின் உயர் மட்டம் தெரிவித்திருந்த கருத்துக்களையிட்டு அவர்கள் கடுமையாக ஆட்சேபித்திருக்கிறார்கள்.

இப்பொழுதுள்ள நிலைமைகளின்படி, களம்,டயஸ்பொறா, தமிழகம் ஆகிய மூன்று தளங்களையும் உள்ளடக்கிய பரந்த தமிழ்த் தேசிய அரங்கை எடுத்து நோக்கின், டயஸ்பொறாவிலும் தமிழகத்திலுமுள்ள தீவிரமான சக்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கின்றார்கள். மிதமான சக்திகள் ஓரளவிற்கு கூட்டமைப்பை ஆதரிக்கின்றார்கள். அதேசமயம், தாய் தளத்தில் கூட்டமைப்பே மக்கள் ஆணையைப் பெற்ற ஓரே கட்சியாகக் காணப்படுகி;றது.

ஏற்கனவே, எனது கட்டுரை ஒன்றில் கூறப்பட்டதைப் போல வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின் கூட்டமைப்பின் உயர் பீடம் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாகவும், கறாராகவும் முன்வைத்து வருகிறது. அண்மையில் இந்தியாவில் வைத்து கூட்டமைப்பின் தலைவர் கருத்துத் தெரிவித்த போது, இந்தியாவில் இருப்பதைப் போன்ற ஒரு சமஷ்டி அமைப்பையே தாங்கள் கோருவதாக கூறியிருக்கின்றார். அதாவது, வடமாகாண சபை தேர்தலின் பின் பெற்ற மக்கள் ஆணை காரணமாகவும், அந்த மக்கள் ஆணையின் பெயரால் கிடைத்துவரும் ராஜிய அங்கீகாரத்தின் காரணமாகவும் கூட்டமைப்பானது தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்து வருகிறது.

ONU / UNOஆனால், அதேசமயம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கூட்டமைப்பின் மேற்படி நிலைப்பாடுகளுக்கு எதிராக தனது நிலைப்பாடுகளை முன்வைத்து வருகிறது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு எதிரான தனது கருத்துக்களை தெளிவாக முன்வைத்திருந்தது.அதாவது, வடமாகாண சபைக்குப் பின் கூட்டமைப்பு முன்வைத்து வரும் அதன் நிலைப்பாடுகளின் அடிப்படையில் கூறின், கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான வேறுபாடுகள் கூர்மையடைந்து வருவதையே காணமுடிகின்றது. போர்க் குற்றம் தொடர்பிலும், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையா? இல்லையா? என்பது தொடர்பிலும், தமிழர்களுக்கான உச்சபட்ச தீர்வு எது? என்பது தொடர்பிலும் இவ்விரு கட்சிகளும் எதிர் எதிர் நிலைப்பாடுகளோடு காணப்படுகின்றன. அதாவது, இரண்டு கட்சிகளுக்கு மிடையில் இப்பொழுது ஆறு வேறுபாடுகள் அல்ல. அறுபதிற்கும் அதிகமான வேறுபாடுகள் இருப்பது துலக்கமாகத் தெரியத் தொடங்கிவிட்டது. இரண்டு கட்சிகளும் அவற்றின் நிலைப்பாடுகளைப் பொறுத்த வரை துருவ நிலைகளை நோக்கிச் செல்கின்றன.

தீவிர போக்குடைய தேசியவாதிகளும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியலை அப்;படியே தொடர முற்படும் தரப்புக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கின்றன. அதேசமயம், மிதப் போக்குடைய சக்திகளும் புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் சக்திகளும் கூட்டமைப்பை ஆதரிக்கின்றன. இதில் கூட்டமைப்பிலுள்ள தீவிர நிலைப்பாடுடைய முக்கியஸ்தர்களை டயஸ்பொறா தத்தெடுக்க முயற்சிக்கிறது.

மேற்குநாடுகள் தமிழ் டயஸ்பொறாவுக்கு அதன் சக்திக்கு மீறிய ஒரு முக்கியத்துவத்தை வழங்கி வருவதாகவும் ஒரு அவதானிப்பு உண்டு.; இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட டயஸ்பொறா நண்பரும் அதைச் சுட்டிக்காhட்டுயிருந்தார்.மேற்குநாடுகள் அவற்றின் வியுகத்தேவயின் நிமித்தம் தமிழ் டயஸ்பொறாவுக்கு அதன் சக்திக்கு மீறிய ஒரு முக்கியத்துவத்தை வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.

இத்தகைய ஒரு பின்புலத்தில் டயஸ்பொறாவிலும் தமிழகத்திலும் தீவிர தேசியவாத சக்திகளின் கையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஆனால், தாய்த் தளத்தில் கூட்டமைப்புக்கே மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முரண்பாட்டையே தமிழகமும், டயஸ்பொறாவும், தாய்த் தளமும் பிரதிபலிப்பது போல ஒரு தோற்றம் உருவாகலாம். ஆனால், இங்கு பிளவுண்டிருப்பது இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சக்திதான்.மெலிந்து காணப்படுவது தமிழ்தேசிய ஜக்கியம் தான். ஜெனிவாவை நெருங்கிச் செல்லும் இந்நாட்களில் தமிழ்ச் சக்தியானது ஆகக்கூடியபட்ச பொதுத் தளமொன்றில் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அரங்கிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் அப்படியொரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஐக்கியப்பட முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு கூட்டமைப்பானது அதன் நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இத்தகையதொரு பின்னணியில் தமிழர்கள் ஓரணியாகத் திரண்டு ஜெனிவாவை எதிர்கொள்வது சாத்தியமா? கூட்டமைப்பை தீவிரமாக எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் அப்படியொரு ஐக்கியம் சாத்தியமில்லை மட்டுமல்ல, அது தேவையும் இல்லை என்று. ஏனெனில், கூட்டமைப்பானது தனது சொந்த நிகழ்ச்சி நிரலின்படி செயற்படவில்லை என்றும், அது சக்தி மிக்க அயல் நாட்டின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தனக்குத்தரப்பட்ட மக்கள் ஆணையை திரித்து வியாக்கியானப்படுத்தி வரும் கூட்டமைப்பை இனித் திருத்த முடியாது என்று கூறுமவர்கள், ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்த வேண்டும் அல்லது மாற்றுக் கட்சியைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றார்கள்.

கூட்டமைப்பைத் திருத்துவது அல்லது மாற்றுக் கட்சி ஒன்றை உருவாக்குவது என்பவை எல்லாம் நீண்ட காலத் திட்டங்கள். ஆனால், ஜெனிவாவை எதிர்கொள்வது என்பது ஓர் உடனடித் திட்டம். தாய் தளத்தில் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சி எதைக் கூறுகிறதோ அதைத் தான் அனைத்துலக சமூகம் முதலில் கேட்கும். எனவே, அரங்கில் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரே கட்சியாகக் காணப்படும் கூட்டமைப்பைத் தவிர்த்துவிட்டு ஜெனிவாவை எதிர்கொள்வதற்குரிய ஒரு வியூகத்தை தமிழர்களால் வகுக்க முடியாது.

உடனடியான, குறுங் கால நோக்கிலான ஒரு பொதுவேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றுதிரள வேண்டும். ஜெனிவாவில் தமிழர்கள் ஒரு தரப்பில்லைத்தான். ஆனால், தமிழ்ச் சக்தி ஒரு முகப்படுத்தப்படும்போது அது இப்பொழுது இருப்பதைவிடவும் பலமானதாக பிரமாண்டமானதாக மாறும். அதன் மூலம் இப்போது இருப்பதைவிடவும் அதிகரித்த அளவில் அனைத்துலக அபிப்பிராயத்தை நொதிக்கச் செய்ய முடியும். எனவே, அதற்குரிய ஒரு பொதுவேலைத் திட்டத்தை தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும். முதலில் தமிழர்கள் கறுப்பு வெள்ளையாகச் சிந்திப்பதை நிறுத்தவேண்டும். தங்களுக்கிடையில் ஆகக்கூடிய பட்சம் சாம்பல் நிறப் பொதுப் பரப்புக்களைக் கண்டுபிடிக்க வேண்டும். தங்கள் தங்கள் கட்சியின் அல்லது அமைப்பின் மையத்தை விட்டுக்கொடுக்காமலும், கரைய விடாமலும் பேணிக்கொள்ளும் அதேசமயம், ஓரங்களில் நிபந்தனைகளோடு கரைந்து கொடுக்கலாம். அதாவது, தமிழர்கள் முதலில் தங்களுக்கிடையில் ஒரு பொதுத் தளத்தை உருவாக்கத்தக்க விதத்தில் ஒருவர் மாற்றவரோடு engage பண்ண வேண்டும். வெளித் தரப்புக்களோடு engage பண்ணமுதல் தமிழர்கள் தங்களுக்கிடையில் engage பண்ண வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களுக்குப் பொறுப்புக்கூறவல்ல ஒரு கூட்டுத் தலைமை உருவாகும். அரபாத் பலஸ்தீனத்தில் ஒரு கட்டம் வரை இதைச் சாதித்தார். தென்னாபிரிக்காவில் மண்டேலாவும் இதைச் சாதித்தார். இவை தவிர மேலும் இரு உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

பலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்று யூதப் பயணக் கைதிகளை உகண்டாவின் தலைநகரமான எண்ரபே விமான நிலையத்தில்; தடுத்து வைத்திருந்தபோது பணயக் கைதிகளை மீட்பதற்கான ஒரு அதிரடியான படை நடவடிக்கையை பற்றி இஸ்ரேலிய அரசாங்கம் திட்டமிட்டது. இத்திட்டமிடலின்போது அது முதலில் அணுகியது எதிர்க்கட்சிகளைத் தான். அதை ஒரு ஆளும் கட்சியின் திட்டமாக இல்லாமல் ஒட்டுமொத்த யூதர்களின் தேசியத் திட்டமாக முன்னெடுப்பதே இஸ்ரேலிய அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் நிகழ்க்கூடிய ஒரு அதிரடிப் படை நடவடிக்கையானது பிழைக்குமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் அதை தனக்கு எதிராக திருப்பிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையும் ஆளும் கட்சியிடம் இருந்தது. எதுவாயினும், தமது இனத்தவர்களை மீட்கும் ஒரு படை நடவடிக்கையில் யூதக் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கிடையில் ஐக்கியப்பட்ட ஒரு முடிவுக்கு வந்தன.

ஜெனிவாவில் தமிழர்கள் எதிர்கொள்வது என்பது பணயக் கைதிகளை மீட்கும் ஒரு படை நடவடிக்கையல்ல. ஆனால், தமிழர்கள் ஒரு தரப்பாக இல்லாத ஓர் அரங்கில் சக்தி மிக்க நாடுகளின் அனைத்துலக வியூகங்களுக்குள் தமிழர்களுடைய அரசியல் பணயக் கைதியாகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடாவது தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டும். இது முதலாவது உதாரணம்.

இரண்டாவது உதாரணம் தென்னிலங்கையில் உள்ளது. அங்குள்ள பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஜெனிவாவை எப்படி எதிர்கொள்கிறது? வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்திற்கு முன் தோற்கடிக்கப்பட்ட கட்சியாகக் காணப்படும் ஐ.தே.க.வானது ஜெனிவாவைப் பயன்படுத்தி மேலெழ முயற்சிக்கலாம். அது மேற்கிற்கு விசுவாசமான ஒரு கட்சி. அவர்கள் நினைத்தால் ஜெனிவா அரங்கை அரசாங்கத்திற்கு எதிராக உச்சபட்சமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்ய முயற்சிக்கவில்லை. அப்படிச் செய்தால் சாதாரண சிங்களப் பொதுமக்கள் ஐ.தே.க.வை நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒரு கட்சியாகவே பார்ப்பார்கள் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம் இது விசயத்தில் அரசாங்கத்திற்கும் ஐ.தே.க.விற்கும் இடையில் ஒருவித தேசிய ஐக்கியம் காணப்படுகிறது. உள்நாட்டில் அவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால், அனைத்துலக அரங்கில் அவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்கவில்லை என்றபோதிலும் பலவீனப்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழர்கள் இவற்றிலிருந்து பாடம் கற்கவேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனிவாவை எதிர்கொள்வதைக் குறித்து எந்தவொரு கூட்டுத் திட்டமும் தமிழர்களால் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இறந்த காலத்திலிருந்து பாடத்தைக் கற்கத் தவறியதன் விளைவே இது எனலாம். இம்முறையும் அந்தத் தவறை தமிழர்கள் விடக்கூடாது. ஆகக் குறைந்த பட்ச நிபந்தனைகளோடு ஆகக் கூடிய பட்ச ஐக்கியம் ஒன்றைக் குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும் engagement என்று வந்தால் எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்க்க முடியாது. கறுப்பு வெள்ளையாகச் சிந்தித்தால் இந்தப்பூமியில் தமிழர்களுக்கு எதிரிகளே அதிகம் இருப்பர். ஜெனிவாவை நெருங்கிச்செல்லும் இந்நாட்களில் ஐக்கியத்தை விட தேசியத்தன்மை மிக்க பெரும் செயல் எதுவுமில்லை.

தேர்தல் காலக் கூட்டுக்களை உருவாக்குவது போல குறைந்த பட்சம் ஜெனிவாக் காலக் கூட்டுக்களை யாவது உருவாக்குவதன் மூலம் தான் தமிழர்கள் ஜெனிவாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *