Google

ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம்

Written on:August 10, 2014
Comments
Add One

After-Baru’s-book-Natwar-Singh-’s-revelations-may-rock-Congressமுன்னாள் இந்திய வெளியூறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூல் சர்ச்சைகளைக் கிளம்பியுள்ளது. ஒரு வாழ்க்கை போதாது என்ற தலைப்பிலான அந்த நூலில் சிறிலங்காவின் அவலம் என்ற ஓர் அத்தியாயம் உண்டு. அதில் ஈழப் போர் தொடர்பில் அப்போதிருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகளைக் குறித்து நட்வர்சிங் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். ராஜீவ் காந்தி தகுதியான ஆலோசகர்களை தனக்கருகில் வைத்துக்கொள்ளவில்லை என்றும், விடுதலைப்புலிகளைக் குறித்து சரியான மதிப்பீடு இந்தியப் படைத்துறையிடம் இருக்கவில்லை என்றும் முடிவுகளை எடுக்கும் போது ராஜீவ் காந்தி சாகச உணர்வுடன் செயற்பட்டார் என்றும் குறிப்பாக, சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கும் போது கூட்டுத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக அமைச்சரவைக்குத் தெரியாமலேயே அவர் முடிவுகளை எடுத்ததாகவும் நட்வர்சிங் கூறுகிறார். சிறிலங்காவின் அவலம் என்ற அத்தியாயத்தை அவர் பின்வருமாறு முடிக்கிறார. ‘‘மிகத் தொடக்கத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை மிகத் தவறாகக் கையாளப்பட்டதுடன் அது முழு அளவிலான ஒரு தோல்வியாகவும் முடிவடைந்தது…”

நட்வர்சிங் 35 ஆண்டுகள் கொங்ரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர். 2008ஆம் ஆண்டு அவர் கட்சியிலிருந்து விலகினார். அவருடைய அரசியல் வாழ்வில் அவர் அதிக பட்சம் இந்திரா குடும்பத்திற்கு இணக்கமானவராகவே அடையாளம் காணப்பட்டார். இந்நூலை அவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார். ஆனால்; அது வெளியிடப்பட்ட தருணம் உள்நோக்கம் உடையது என்று அவரை விமர்ச்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மோடி பெரு வெற்றிபெற்றிருக்கும் ஒரு பின்னணியில் கொங்ரஸிற்கு எதிரான ஓர் அலை உச்சமாக இருப்பதை நன்கு கணித்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக அவர்கள் விமர்ச்சிக்கிறார்கள். கொங்கிரஸிற்கு எதிரான அலைவீசும் ஒரு காலத்தில் இப்படியொரு நூலை வெளியிட்டதன் மூலம் நட்வர்சிங் புத்தகத்தை பரவலாகவும் வெற்றிகரமாகவும் விற்க முற்படுகிறார் என்றுமவர்கள் கூறுகிறார்கள். புத்தகம் சந்தைக்குவந்து நான்கே நாட்களில் 50,000 பிரதிகள் விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

நட்வர்சிங் நண்பர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் தனிப்பட்ட உரையாடல்களை பொது வெளிக்குள் கொண்டுவந்திருக்கக்கூடாது என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார். கொங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தானும் ஒரு சுயசரிதை எழுதப்போவதாகவும் அதில் உண்மைகளை வெளிக்கொண்டு வரப் போவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நட்வர்சிங் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஈழத் தமிழர்களுக்கு புதியவையோ அதிர்ச்சியூட்டுபவையோ அல்ல. இது தொடர்பில் ஏற்கனவே முன்னாள் ஐ.பி.கே.எவ். தளபதிகளும், இராஜதந்திரிகளும், அரசியல் வாதிகளும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். நூல்களை எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, அந்நாட்களில் இறுகிய முகத்தோடு சுங்கானும் கையுமாக ஒரு வைஸ்ராய் போல காட்சியளித்த ஜே.என். டிக்சிற் ஓய்வு பெற்ற பின் எழுதிய நூலில் தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கிறார். கொழும்பில் எனக்களிக்கப்பட்ட பணி என்ற பெயரிலான அந்த நூலில் நடந்து முடிந்த தவறுகளுக்காக தன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு மிய குல்பா – mea culpa – என்ற லத்தீன் வாசகத்தை அவர் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்வர்கள் பாவ மன்னிப்புக் கேட்கும்போது பயன்படுத்தும் வார்த்தைகள் அவை.

டிக்சிற்றைப் போல நட்வர்சிங் பாவ மன்னிப்புக் கேட்கவில்லைத்தான். ஆனால், அவர் பழியை ராஜீவ் காந்தியின் மீது போடுகிறார். அண்மையில் ஒரு பேட்டியில் கேணல் ஹரிகரனும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்.அப்போதிருந்த இந்தியப்படைத் தளபதியான சுந்தர்ஜீ ராஜீவ் காந்திக்கு சரியான மதிப்பீட்டை வழங்கவில்லை என்று இப்பொழுது கூறும் கேணல் ஹரிகரன் அமைதிப் படையின் காலத்தில் படையப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

நட்வர்சிங், டிக்சிற், ஹரிகரன் போன்ற முன்னாள் முக்கியஸ்தர்கள் பதவியிலிருந்த காலம் வரை உண்மைகளை விழுங்கிக் கொண்டு உத்தரவுகளுக்குக் கீழ்படிந்தார்கள். ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. குற்ற உணர்ச்சி அவர்களை ஆட்கொண்டதன் விளைவாகவும் அவர்கள் இப்படி கூற முற்படலாம்.

ஆனால், இவர்கள் எல்லாரையும் போலன்றி ராஜீவ் காந்தியின் முடிவுகளை கேள்வி கேட்ட ஒரு இராஜதந்திரியும் அவர்கள் மத்தியில் இருந்தார். அந்நாட்களில் இந்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனே அவராகும். ராஜீவ் காந்தியால் பகிரங்கமாக அவமதிக்கப்பட்ட ஒரு நிலையில் தன் பதவியைத் துறந்தவர் அவர். இந்திய இலங்கை உடன்படிக்கையை அவர் ‘‘செத்துப் பிறந்த சிசு” என்று வர்ணித்தார். இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னராக இந்துப் பத்திரிகையின் ஆசிரியரான ராமிடம் வெங்கடேஸ்வரன் அந்த உடன்படிக்கையின் மீதான தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். அந்த உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்பிற்கும் இடையிலேயே செய்யப்பட வேண்டும் என்று அவர் ராமிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், ஏற்பாடுகள் யாவும் பூர்;த்தி செய்யப்பட்டுவிட்ட ஒரு நிலையில் அதில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்று ராம் கூறியிருக்கிறார்.

டிக்சிற்ரோ நட்வர்சிங்கோ அல்லது அவர்களைப் போன்ற ஓய்வு பெற்ற பின் ஞானம் பெற்ற முன்னாள் முக்கியஸ்தர்கள் எவருமே வெங்கடேஸ்வரனுக்கு நிகரில்லைத்தான். அவர்களால் இப்பொழுது விமர்ச்சிக்கப்படும் தவறான முடிவுகளுக்காக அவர்கள் மிய குல்பா என்று சொல்லிவிட்டு ஆறுதல் அடைய முடியும். ஆனால், அவர்களுடைய தவறான முடிவுகள் காரணமாக ஒரு சிறிய மக்கள் கூட்டம் எப்படியெல்லாம் வேட்டையடப்பட்டது?

ஒரு பிராந்திய பேரரசின் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.ஜெயர்த்தனவை வழிக்குக் கொண்டு வருவதற்காக தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்தியத் தலையீடு காரணமாகவே ஈழப் போர் அதன் இயல்பான படி முறைகளுக்கூடாக வளராமல் மிகக் குறுகிய காலத்திற்குள் திடீரென்று அசாதாரணமாக வீங்கியது என்று ஏற்கனவே விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த வீக்கம் காரணமாகவே தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கம் போதியளவு பலப்படுத்தப்பட முடியாது போயிற்று. பின்னாளில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். கொழும்பைக் கையாள்வதே இந்தியாவின் மூலோபாயமாக இருந்தது. அந்தத் தேவை கருதி ஈழத் தமிழர்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள். அல்லது கைவிடப்பட்டார்கள்.

இப்பொழுது நட்வர்சிங் எழுதுவதைப் போல நாளை நாராயணனும் எழுதக் கூடும் அல்லது விஜய் நம்பியாரும் எழுதக் கூடும். அவர்களும் மிய குல்பா என்று சொல்லிவிட்டு அந்த நூல்களை பரபரப்பாக விற்றுத் தீர்க்கக்கூடும். ஆனால், யார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் ஈழத் தமிழர்களே பந்தாடப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காத வரை அதாவது, யாருடைய தவறுகளின் பெயராலும் அவர்கள் பலியிடப்படாத ஒரு பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்பட்டாத வரை மேற்படி ஓய்வூதியர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களால் அல்லது பாவ மன்னிப்புக்களால் நன்மைகள் எதுவும் விளையப்போவதில்லை. நீதியை நிலை நாட்ட முடியாத குற்ற உணர்ச்சியை ஒர் உத்தியாகவும் பார்க்க வேண்டியிருக்கும். இதை இப்படி எழுதும் போது இந்த இடத்தில் ரோல்ஸ்ரோயின் உலகப் புகழ் பெற்ற புத்துயிர்ப்பு என்ற நாவலை இங்கு நினைவு கூரவேண்டும்.

ரோல்ஸ்ரோய்க்கும் இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்திக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. ரோல்ஸ்ரோயின் அந்திம காலங்களில் காந்திக்கும் அவருக்குமிடையில் கடித போக்குவரத்து இருந்தது. காந்தியத்தின் செயற்பாட்டு உத்திகளில் ரோல்ஸ்ரோயின் செல்வாக்கு அதிகம் இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவதுண்டு. காந்தியை அதிகம் ஆகர்ஸித்த ஐரோப்பிய ஆளுமைகளுள் ரோல்ஸ்ரோய் முதன்மையானவர்.

ரோல்ஸ்ரோய் எழுத்திய புத்துயிர்ப்பு என்ற நாவலில் வரும் மையப் பாத்திரம் குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தானிழைத்த குற்றத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் பரிகாரம் தேட முயற்சிக்கிறது. பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன் ஏழைப் பணிப்பெண் ஒருத்தியை தனது இச்சைகளுக்குப் பலியாக்கி விடுகிறான். அதன் பின் தனது குடும்பப் பின்னணி காரணமாக சமூகத்தில் மிக உயர் நிலைக்கு வருகிறான். வயது முதிரும்; போது இளம் வயதில் அவன் இழைத்த குற்றம் தொடர்பான குற்ற உணர்ச்சி அவனை தாக்கத் தொடங்குகிறது. தான் இழைத்த குற்றத்திற்கு பரிகாரம் காணும் பொருட்டு தன்னால் சிதைக்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தேடிச் செல்கிறான். அவனால் சிதைக்கப்பட்ட பின் சமூகத்தின் இருண்ட பகுதிக்குள் தள்ளப்பட்டு பாலியல் தொழிலாழியாக மாறிய அந்தப் பெண்,ஒரு கொலைக்குற்றச்சாட்டில் சிக்கி சைபீரியாவில் கைதியாக இருப்பது தெரியவருகிறது. அவளைத் தேடிச்செல்லும் கதாநாயகன் சிறையில் அவளைச் சந்திக்கும் போதெல்லாம் சிறையில் வதைபடும் ஏனைய கைதிகளோடும் உறவாடுகிறான். இதன்முலம் சிறையில் நிகழும் கொடுமைகள் தொடர்பில் ஒரு பிரபுவாக மேலும் மேலும் குற்றவுணர்ச்சி கொள்கிறான். இவ்விதமாக குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தானிழைத்த குற்றத்திற்கு பரிகாரம் தேடமுற்படும் ஒரு மனிதனின் கதையே புத்துயிர்ப்பு.

ஈழத் தமிழர்கள் இப்பொழுது ஏறக்குறைய அந்தப் பெண்ணின் நிலையில் தான் இருக்கிறார்கள். ஒரு பிராந்தியப் பேரரசின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தொடர்ச்சியாக வேட்டையடப்பட்டு இப்பிராந்தியத்திலேயே மிக மோசமான கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள். இந்தியப் பண்பாட்டின் கூட்டு மனமானது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய இடமிது. சிறிய, பலவீனமான ஒரு மக்கள் கூட்டத்தை தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக கையாண்டது குறித்தும் கைவிட்டது குறித்தும் ஏற்பட வேண்டிய கூட்டுக் குற்ற உணர்ச்சி அது. மிய குல்பா என்று சொல்வதால் மட்டும் அது தீர்ந்துவிடாது. தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் போதே இந்தியப் பண்பாட்டின் கூட்டு மனம் மேற்படி குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியும்.

நடந்த முடிந்த தவறுகளுக்கு யாராவது ஒரு தலைவரை அல்லது தளபதியை அல்லது இராஜதந்திரியை பலியாடாக்குவதன் மூலம் ஏனைய கொள்கை வகுப்பாளர்கள் அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியாது. டிக்சிற் தனது நூலை எழுதி முடிக்கும் தறுவாயில் அவருடைய அரசியல் மற்றும் இராஜதந்திரவியல் குரு என்று அவரால் வர்ணிக்கப்படுபவரும் இந்திரா காந்தியின் பிரதான செயலராக இருந்தவருமான பி.என். ஹக்சர் என்பவரைச் சந்திக்கிறார். ஹக்சரிடம் டிக்சிற் பின்வரும் தொனிப்படக் கூறுகிறார்…. சிறிலங்காவைப் பற்றி எனது நூலை எழுதி முடித்துக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். எங்களுடைய சிறிலங்கா அனுபவம் ஒரு துன்பியல் நாடகமா? இது விசயத்தில் திருமதி காந்தி இலங்கையில் தலையிடுவது என்ற கொள்கையை தொடங்கியிரா விட்டால் இந்தத் துன்பியல் நாடகம்; தவிர்க்கப்பட்டிருந்திக்குமா? என்று. அதற்கு ஹக்சர் சொன்ன பதில் தனக்கு சிறிலங்காவில் வழங்கப்பட்டிருந்த பணியைப் பற்றிய கரிசனையை மேலும் இரை மீட்டுவதாக அமைந்தது என்று டிக்சிற் கூறுகிறார். ஹக்சர் சொன்ன பதில் வருமாறு, ‘‘மனி,……(அப்பிடித்தான் டிக்சிற் அழைக்கப்பட்டார்) நீங்கள் சேக்ஸ்பியரின் எல்லா துன்பியல் நாடகங்களையும் படித்திருப்பீர்கள்…… அத்துன்பியல் நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஏன் யாராவது ஒரு தனிநபர் குவிமைய இயங்கு விசையாக (focal impulse) இருக்கிறார் என்பதையிட்டு எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?……. அது மூன்றாவது றிச்சர்ட்டாகவோ அல்லது கிங்லியராகவோ அல்லது மக்பெத்தாகவோ அல்லது ஒத்தலோவாகவோ அல்லது ஹம்லற்றாகவோ இருக்கலாம்…”

உண்மைதான் அரசியலில் துன்பியல் விளைவுகளுக்கு அல்லது கூட்டுக் குற்றங்களுக்கு அல்லது கூட்டுத் தவறுகளுக்கு யாரோ ஒருவரே பலியாடாக்கப்படுகிறார். ஆனால், ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை இந்தியத் தலைவர்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்களின் முடிவுகள் அவை கூட்டுத் தீர்மானங்களாக இருந்தாலும் சரி அல்லது தனி நபர் தீர்மானங்களாக இருந்தாலும் சரி அவற்றிற்குரிய இறுதி விலையைக் கொடுத்தது ஆயுதம் தரித்திராத அப்பாவிப் பொது சனங்கள்தான்.

ஓய்வூதியர்கள் பாவ மன்னிப்புக் கேட்பதாலோ அல்லது ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பதாலோ ஈழத் தமிழர்களுக்கு இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. அல்லது ஓய்வூதியர்கள் தமிழ்த் தேசியம் கதைத்துக் கொண்டு தேர்தல்களில் பெரு வெற்றி பெற்றதாலும் தமிழர்களுக்கு இதுவரையிலும் எதுவும் கிடைக்கவில்லை.

One Comment add one

  1. Vijey says:

    ஈழத்தமிழர்களின் பிரச்சினை சிங்கள-பெளத்த பெருந்தேசிய நலன்சார்ந்தோ அன்றில் பிராந்திய அரசின் நலன்களின் அடிப்படையிலோ நோக்கப்படாது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்சார்ந்து நோக்கப்பட வேண்டும். –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *