Google

ஜெனிவா – படம் பார் பாடம் படி

Written on:February 19, 2013
Comments
Add One

யுத்தம் முடிந்த பின் வந்த மூன்றாவது சுதந்திர தினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது. இதில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையை தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றில் நிராகரித்தன அல்லது பொருட்படுத்தாது விட்டன. ஆனால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அந்த உரைக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் கவனிப்பிற்குரியது. குறிப்பாக, இந்திய மற்றும் மேற்கத்தேய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினரை பிரதிபலிக்கும் ஊடகங்கள் மேற்படி உரைக்கு வழங்கிய முக்கியத்துவத்தைப் பார்த்தால் அந்த உரை யாரை சென்றடையவேண்டுமோ அவர்களைச் சென்றடைந்தது என்றே பொருள்படும்.

தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் அந்த உரையில் புதினம் ஏதும் இல்லை என்று விமர்சிக்கின்றன. ஆனால், அப்படி அல்ல. அந்த உரை மிகத் தெளிவான, திட்டவட்டமான ஒரு செய்தியை மூன்று தரப்பினருக்கு, அதாவது, தமிழ், இந்திய, மேற்கத்தையே தரப்பினருக்கு முன்வைக்கின்றது. அந்த உரையின் உள்ளடக்கம் அது நிழ்த்தப்பட்ட இடம், அது நிகழ்த்தப்பட்ட காலம் என்பவற்றை கருதி கூறுமிடத்து அது இராஜதந்திர பரிபாசைகள் செறிந்த ஒரு உரை எனலாம்.

முதலில் அந்த உரையின் உள்ளடக்கதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இறைமையைப் பாதுகாப்பதிலும், சுயாதீனத்தைப் பேணுவதிலும், நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடுவதிலுள்ள உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இனங்களின் அடிப்படையில் வௌ;வேறு நிர்வாகங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும், எல்லாச் சமூகங்களும் சம உரிமையுடன் ஒன்றாக வாழ முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்களுக்கு சுயாட்சி கிடையாது.

இரண்டாவதாக, அந்த உரை நிகழ்த்தப்பட்ட ஸ்தலம் எதுவெனப் பார்க்கலாம். திருகோணமலைக்கு பின்வரும் கேந்திர முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது அது மூவினங்களும் சேர்ந்து வாழும் ஆனால், தற்பொழுது தமிழர்கள் தாங்கள் சிறுத்துக் கொண்டு வருவதாகக் கருதும் ஒரு தலைப்பட்டினமாக அது காணப்படுகின்றது என்பது. இரண்டாவது தமிழர்களுடைய தனிநாட்டுக் கனவைப் பொறுத்தவரை அது ஸ்தலப் பெருமை மிக்க தலைநகரமாக கருதப்படுகின்றது என்பது.மூன்றாவது அது ஒரு துறைமுக நகரமாக இருப்பதால் முன்னைய தசாப்தங்களில் அதாவது கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு ஒப்பிட்டளவில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்ட காலப்பகுதியில் அது ஒரு நரம்பு மையத்தில் அமைந்திருந்தது என்பது. இலங்கை – இந்திய உடன்படிக்கையில் மேற்படி கேந்திர முக்கியத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். இத்தகைய பொருள்படக் கூறின் முன்னைய தசாப்தங்களில் அதன் கேந்திர முக்கியத்துவம் காரணமாக திருகோணமலையானது ஒரு கவர்ச்சிக் கன்னியாகத் திகழ்ந்திருக்கிறது. நாலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தாய் நகரம் அது என்பது.

எனவே, மேற்படி முக்கியத்துவங்கள் மிக்க திருகோணமலையில் சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்ற முடிவே ஒரு செய்திதான்.

அடுத்தது மேற்படி உரை நிகழ்த்தப்பட்ட காலம் எது என்பது. ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு காலச் சூழலில்தான் மேற்படி உரை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

எனவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கம் யார் யாருக்கு என்ன சொல்ல முற்படுகிறது என்பது மிகத் தெளிவாகவும், கூராகவும் வெளித் தெரிகிறது. அதன்படி மூன்று தரப்பினருக்கு அதில் செய்திகள் உண்டு.

முதலாவது தமிழர்களுக்கு- வெளிச் சக்திகளின் துணையோடு அரசாங்கத்தை பணிய வைக்க முடியாது என்பதே அது. அப்படி முயற்சித்தால் இப்போது கிடைப்பதும் கிடைக்காமல் போகலாம் என்பது. இரண்டாவது இந்தியாவிற்கு – இந்திய இலங்கை உடன்டிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்குக் கூட தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட மாட்டாது என்பதே அது. அதாவது, 13ஆவது திருத்தச் சட்டத்தை பொருட்படுத்தாமலும் விடலாம் என்பது.

மூன்றாவது மேற்கு நாடுகளுக்கு – வெளிநாடுகள் இந்த அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்க முடியாது என்பதே அது. அதாவது தமிழர்களை முன்னிறுத்தியே மேற்குநாடுகள் ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் ஓர் சூழலில் தமிழர்களுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்பதை குறிப்பால் உணர்த்துவதன் மூலம் மேற்கு நாடுகள் தமிழர்களை கையாள்வதால் வரும் இறுதி விளைவு தமிழர்களுக்குப் பாதகமானதாக அமையக்கூடும் என்பதே அது.

எனவே, 65ஆவது சுதந்திர தின உரையின் படி அரசாங்கம் மிகத் தெளிவாகவும், கூராகவும் தனது நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருக்கின்றது. தமிழர்களும் உட்பட எந்தவொரு சக்தியும் வெளியாரோடு சேர்ந்து நாட்டை ‘‘காட்டிக் கொடுக்க” எத்தனித்தால் அது அவர்களுக்கு தீங்காகவே முடியும் என்பதே அது.
இதனால் வரக்கூடிய பின் விளைவுகளைக் குறித்தும் அரசாங்கம் தெளிவாகவும், தீர்மானகரமாகவும் காணப்படுகின்றது. ஜெனிவாவில் மேற்குநாடுகளுக்கு இருக்கக் கூடிய வரையறைகளை அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கின்றது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் அரசாங்கத்தை தனிமைப்படுவத்துவது அல்லது தண்டிப்பது போன்ற முடிவுகளை எடுக்கத் தயங்குவது தெரிகிறது. இது விசயத்தில் இந்தியாவுடன் சில டீல்களுக்குப் போவதன் மூலம் நிலைமையின் கடுமையை தணிக்க முடியும் என்று கொழும்பில் நம்பப்படுகின்றது. இத்தகைய டீல்களுக்கான முன் முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்தியாவை ஒரு ஆகக் குறைந்த பட்ச முற்தடுப்பாகக் கொண்டு ஜெனிவாவை எதிர்கொள்ள முடியும் என்றுகொழும்பு நம்புகின்றது. நிலைமைகள் கையை மீறிப் போனாலும் அரசாங்கத்தை தண்டிப்பது என்ற தெரிவுக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்படும் ஒரு சூழலில் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய கௌரவக் குறைச்சல் எனப்படுவது ஒரு பிரச்சினையே அல்ல. அது கொழும்பு ஏழில் உள்ள படித்த உயர் குழாத்தினருக்கு வேண்டுமானால், தலைகுனிவாக இருக்கலாம். ஆனால், அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், அரசாங்கம் யுத்த வெற்றிகளின் உச்சத்தில் அமர்ந்திருக்கின்றது.

இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் வேறெந்த சிங்களத்தலைவர்களும் பெற்றுக் கொடுத்திராத கிடைத்தற்கரிய வெற்றி அது. எனவே,வெளியாருக்கு அந்த வெற்றியைக் காட்டிக் கொடுக்க முற்படும் எவரையும் சாதாரண சிங்கள மக்கள் கேள்விக்கிடமின்றி நிராகரித்துவிடுவார்கள். அதேசமயம் வெளியாரின் அழுத்தங்கள் அதிகரிக்கும்போது அதற்கு நேர் எதிர் விகிதமாக அவர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள். எந்தளவிற்கு எந்தளவு வெளிச்சக்திகளின் அழுத்தம் அதிகரிக்கிறதோ அந்தளவிற்கு அந்தளவு இந்த அரசாங்கம் உள்நாட்டில் பலமடைந்துக் கொண்டே செல்லும்.

இதனால்தான், யுத்த வெற்றியின் மற்றொரு பங்காளியான சரத் பொன்சேகாவை அரசாங்கம் வெற்றிகரமாக பொலிவிழக்கச் செய்ய முடிந்தது. யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்து காணப்பட்டார். தனக்குக் கிடைத்த கீர்த்தியை அரசியலில் முதலிடு செய்ய முற்பட்டார். ஆனால், அவருக்குப் பின்னால் வெளிச் சக்திகள் இருப்பது தெரிய வந்ததை அடுத்தும் அவர் தேர்தலில் தமிழர்களோடு கூட்டுச் சேர முற்பட்டதை அடுத்தும் அவருடைய வீரப் படிமம் சுருங்கிப்போய் விட்டது. கிடைத்தற்கரிய வெற்றியை அவர் வெளிநாடுகளுக்குக் காட்டிக் கொடுக்க முற்படுகின்றார் என்றவொரு படிமம் அவரை சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டதன் விளைவாக அவர் அரசியல் அரங்கில் பொலிவிழந்துபோனார்.

எனவே, ஜெனிவா மாநாடு நெருங்க நெருங்க சாதாரண சிங்கள மக்கள் அரசாங்கத்தை மேலும் மேலும் நெருங்கிச் செல்வார்கள். அதைத் தான் மெய்யான பலம் என்று அரசாங்கம் நம்புகின்றது. இதன் பிரதிபலிப்பே 65ஆவது சுதந்திர தின உரையாகும்.

இவ்விதம் வெளிநாட்டு அழுத்தங்களை தனது உள்நாட்டு அரசியலுக்கு வெற்றிகரமான முதலீடாக மாற்றிக்கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்துடன் தமிழர் தரப்பு அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எத்தகையதொரு பேரத்தை வைத்துக்கொள்ள முடியும்? அல்லது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வெளிச் சக்திகளுடன் எத்தகையதொரு பேரத்தை வைத்துக்கொள்ள முடியும்?
இந்த இடத்தில் மிகவும் குருரமான, கசப்பான ஓர் உண்மையை தமிழர்கள் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அதாவது ஜெனிவாவில் அரங்கேற இருப்பது தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு ஹொலிவூட் திரைப்படம் தான். ரி. ராஜேந்தரின் பாணியில் கூறின், திரைக் கதை வசனம், இசை, நடிப்பு நெறியாள்கை அனைத்தும் ஹொலிவூட்டில்தான். இதில் தமிழர்கள் ஏறக்குறைய பார்வையாளர்கள்தான். தமிழர்களாக நினைத்து இதில் எதையும் மாற்ற முடியாது. ஏனெனில், இதில் தமிழர்கள் உத்தியோகபூர்வ பங்காளிகளாக இல்லை.
அமெரிக்காவில் இருந்து வரும் பிரதானிகள் ரி.என்.ஏ.யை சந்திக்கிறார்கள். ரி.என்.ஏ. பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம்செய்கிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டு ஜெனிவாவில் தமிழர்கள் இராஜதந்திர காய்களை நகர்த்துகிறார்கள் என்று நம்பத் தேவையில்லை. இது முழுக்க முழுக்க மேற்கு நாடுகளுக்கும்கொழும்பிற்கும் இடையிலான சூதாட்டக் களம்தான். இதில் தமிழர்கள் பகடைக் காய்களாக உருட்டப்படுகிறார்கள். கடந்த ஆண்டும் இவ்விதம் உருட்டப்பட்டார்கள்.

ONU / UNOகடந்த ஆண்டு ஜெனிவா மாநாட்டிற்கு முன்பு இலங்கைக்கு வந்த அமெரிக்க பிரதானிகள் தமிழ் தரப்பைச்சந்தித்தபோது, தாங்களும் ஜெனீவாவிற்கு வர வேண்டுமா என்று தமிழ் தரப்பில் கேட்கப்பட்டதாம். அதற்கு அவர்கள் சொன்னார்களாம். இல்லை. நீங்கள் வரத் தேவையில்லை. நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்ற தொனிப்பட.அதாவது இதுமுழுக்க முழுக்க அவர்களுடைய ஆடுகளம். தமிழர்கள் வெறும் பார்வையாளர்கள்தான். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கை – இந்திய உடன்படிக்கையின்போது எப்படிப் பார்வையாளர்களாக இருந்தார்களேர அப்படித்தான். இதில் என்ன வித்தியாசமெனில், 1987இல் வெளியிடப்பட்டது ஒரு பொலிவூட் படம்.இப்பொழுது வெளியாக இருப்பது ஓரு ஹொலிவூட் படம். 1987இல் பொலிவூட் படம் வெளியானபோது பிரபாகரன் இருந்தார். ரோகண விஜயவீர இருந்தார். இருவரும் படம் பார்க்க தயாராகஇருக்கவில்லை. எனவே, பொலிவூட் படம் சண்டைக் காட்சியில் முடிவடைந்தது. தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும் அதற்காக இரத்தம் சிந்தவேண்டியிருந்தது. இப்பொழுது ஹொலிவூட் படம். ஆனால், பிரபாகரனும், விஜயவீரவும் இல்லை. ஆயின், அடுத்தது என்ன?
போன ஆண்டும் இப்படியொரு படம் காட்டப்பட்டது. அந்தப் படம் நீண்ட காலம் ஓடவில்லை. இவ்வாண்டு மறுபடியும் ஒருபடம் வெளியாக இருக்கிறது. சிலசமயம் அதுவும் பிசகக்கூடும். பிசகினால் அடுத்த ஆண்டும் ஒரு ஹொலிவூட் படம் வரக்கூடும். இந்நிலையில், தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது படத்தில் நடிக்கப்போகிறார்களா?

One Comment add one

  1. எப்போதும் நிலாந்தனுடைய எழுத்துகளில் உள்ள தீவிரம் குறைவதேயில்லை. அதனால் அது சிலரைச் சுடும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *